ஊரடங்கை தளர்த்திய பின்னர் ஜெர்மனியில் கொரோனா தொற்று பரவுவது உயர்ந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஐரோப்பிய நாடு ஜெர்மனி. இங்கு 1.71 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் கூட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.44 லட்சத்துக்கும் அதிகம். இறப்பு விகிதமும் இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக குறைவு. இதுவரை 7,500 பேர் ஜெர்மனியில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்நாட்டின் 16 மாகாண அரசுகளும் ‘பொருளாதாரத்தை மீட்க ஊரடங்கு நிபந்தனைகளை தளர்த்தவேண்டும்’ என்று மத்திய அரசுக்கு நெருக்கடி அளித்தன. இதன் காரணமாக பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கடந்த புதன்கிழமை ஊரடங்கை தளர்த்தி அறிவித்தார்.
அதேநேரம் அதிக பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் ஊரடங்கு கடுமையாகும் எனவும் அவர் எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜெர்மனியில் கொரோனா தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது.
அதாவது சில வாரங்களுக்கு முன்பு வரை, ஒருவர் மற்ற நபருக்கு கொரோனாவை பரப்புவது ஒரு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருந்தது. கடந்த 5 நாட்களில் இது 1.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
“கொரோனா பரவல் அதிகரிப்பது ஆபத்தானது. இதனால் பாதிப்புக்கு உள்ளாவோர் மற்றும் இறப்போர் எண்ணிக்கை உயரும்” என்று சமூக ஜனநாயக கட்சியின் எம்.பி.யும், தொற்றுநோய்த் துறை பேராசிரியருமான கார்ல் லாவ்டர்பாக் அரசை எச்சரித்துள்ளார்.