2020 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் பிரத்தானியாவின் பொருளாதாரம் 2% சரிந்தது என்று பிரித்தானியாவின் தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் (ONS) வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவுகளின்படி தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டோடு ஒப்பிடும்போது, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பிரித்தானியா பொருளாதாரம் 2% சரிந்தது.
கொரோனா வைரஸ்தொற்றுநோயின் முதல் நேரடி விளைவுகளையும், வைரஸ் பரவுவதைக் குறைக்க எடுக்கப்பட்ட அரசாங்க நடவடிக்கைகளையும் இது காட்டுகிறது என்று ONS தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் மட்டும் பிரத்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8% சரிந்துள்ளது, இது 1997 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவுத் தொடர் தொடங்கியதிலிருந்து மிகப்பெரிய மாதாந்திர வீழ்ச்சியாகும் என்று ONS தெரிவித்துள்ளது.
மார்ச் வரை மூன்று மாதங்களில் பொருளாதாரம் 2% சரிந்ததில் ஆச்சரியமில்லை என்று பிரித்தானியா சான்சிலர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸால் பிரித்தானியா கடுமையான தாக்கத்தை எதிர்கொள்கிறது, உலகெங்கிலும் உள்ள மற்ற எல்லா நாடுகளுக்கும் இது பொதுவானது என்று சுனக் கூறினார்.
அதனால்தான் நாங்கள் முன்னோடியில்லாத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம், நாங்கள் மக்களின் வேலைகள், அவர்களின் வருமானங்கள், இந்த நேரத்தில் வாழ்வாதாரங்கள் மற்றும் வணிகங்களை ஆதரிக்க வேண்டும், எனவே இந்த சீர்குலைவு காலத்தை நாம் கடந்து மறுபுறம் வலுவாக மீண்டு எழுவோம் என்று ரிஷி சுனக் கூறினார். .