பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசி தொடர்பான வழக்கில் யாரும் ஆஜராகக் கூடாதென்று நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் முடிவெடுத்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்கிற காசி தொடர்பான வழக்கில் எந்த வழக்கறிஞர்களும் ஆஜராக கூடாதென்று நாகர்கோவில் வழங்கறிஞர்கள் சங்கம் முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
இதுபோன்று பெண்களை ஏமாற்றி அவர்கள் வாழ்க்கையில் விளையாடும் கயவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் பெண்களுக்கு இதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்காத வண்ணம் அந்த தண்டனை மிகக் கடுமையானதாக இருக்க வேண்டும்.
மேலும், ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த இந்த முடிவை தேமுதிக சார்பில் வரவேற்பதோடு, அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நமது வழக்கறிஞர்கள் இதே உறுதியோடு இருந்தால் தமிழகம் எங்குமே இதுபோன்ற கொடிய செயல்கள் நடக்காத வண்ணம் பலவகையான செயல்களை தடுக்க முடியும் என்று நம்புகிறேன்.
பெண்கள் மோசடி மன்னன் காசி தொடர்பான வழக்கில் யாரும் ஆஜராகக் கூடாது என்ற நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத் தலைவரின் அறிவிப்பை வரவேற்கிறேன். pic.twitter.com/wZnMunYybw
— Vijayakant (@iVijayakant) May 15, 2020
அதேநேரத்தில், பெண்களும் முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப், போன்ற சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாறக்கூடாது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற பழமொழிக்கு ஏற்ப போலியானவர்களை கவனமாக கண்டறிந்தால் மட்டுமே பெண்கள் தங்கள் வாழ்க்கையை தற்காத்துக் கொள்ள முடியும். மேலும், போக்சோ சட்டத்தின்கீழ் பெண்கள் மோசடி மன்னன் காசியை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
காசி சிறுமிகள் உள்பட பல பெண்களை சீரழித்தது தொடர்பான வீடியோக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.