நாங்கள் நினைத்தால் சீனாவுக்கு எதிராக என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியும் என்று அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகங்களில் கடும் மோதல் நிலவிவருகிறது. இந் நிலையில் கொரோனா விவகாரமும் தற்போது சூடு பிடித்திருப்பதனால் கடந்த ஆண்டு முதற்கட்ட ஒப்பந்தம் போடப்பட்டதோடு தொடர்ந்தும் இழுபறி நீடித்து வருகிறது.
இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,
“சீனா எங்கேயோ கூறியது மீண்டும் பேச்சுவார்த்தை என்று. நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இல்லை. வர்த்தகம் பற்றி சீனாவுடன் பேச இப்போதைக்கு விரும்பவில்லை.
நான் சொன்னதெல்லாம் சரியாகவே உள்ளது. மற்ற நாடுகளைப் பாருங்கள் எங்கள் பொருட்களுக்கு வரி விதிக்கிறார்கள், ஆனால் நாங்கள் விதிக்கக் கூடாதாம்.
சீனா எப்போதும் அறிவுச்சொத்துரிமையை அமெரிக்காவிடமிருந்து களவாடி வந்திருக்கிறது. நாங்கள் அவர்களை நிறுத்த முடியும். அதாவது அவர்களுடன் வர்த்தகத்தையே நிறுத்தலாம் என்று கருதுகிறேன். நாம் தான் சீனாவை மறுகட்டமைத்துள்ளோம்.
இங்கு எனக்கு முன்பாக பதவியில் அமர்ந்த பராக் ஒபாமா உட்பட அமெரிக்காவை சீனா சுரண்ட அனுமதித்தனர். தூங்கி வழியும் ஜோ பிடனும்தான். ஆண்டு ஆண்டாக பில்லியன் டொலர்கள் கணக்கில் சீனாவுக்குக் கொட்டிக்கொடுத்துள்ளோம்.
சீன அதிபருடன் நல்லுறவு உள்ளது, ஆனால் அவருடன் இப்போதைக்கு பேச விரும்பவில்லை. சீனாவுடன் முழுக்க முழுக்க உறவுகளையே துண்டிக்கலாம், நாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். மொத்தமாக வர்த்தகத்தையே துண்டித்தால் 500 பில்லியன் டொலர்களை சேமிக்க முடியும்.” என்றும் எச்சரிக்கைப் பாணியில் பேசியிருக்கிறார்.