ஊரடங்கு காரணமாக, சொந்த ஊர்களுக்கு நடைபயணம் மேற்கொள்ளும், தொழிலாளர்களிடம் இந்தியா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறைகளை கேட்டறிந்தார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் திகதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தபட்டு இன்றுடன் 54 நாட்கள் ஆகும் நிலையில், தினக்கூலி தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக சென்று வருகின்றனர்.
இதில், பல இடங்களில் உயிரிழப்புகளும் நடந்துள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்கு சிறப்பு ரெயில்களை மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும், பல தொழிலாளர்கள் இன்னும் நடந்து செல்வதாக செய்திகள் வெளி வருகின்றன. சிலர் சரக்கு வாகனங்களிலும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் சொந்த ஊருக்கு செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து உரையாடினார். டெல்லியில் உள்ள சுக்தேவ் விஹார் மேம்பாலம் அருகே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
அவர், உரையாடும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.