கொரோனா தொடர்பில் அதன் தொடக்க கால மாதிரிகளை மொத்தமாக அழித்ததை சீனா முதன் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் தங்களிடம் ஆதாரம் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கடந்த மாதம் முன்வைத்த வாதம் இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அந்த மாதிரிகளை தாங்கள் அழித்தது, உண்மையில் மூடி மறைக்கும் செயலோ, சதி திட்டமோ அல்ல எனவும்,
மாறாக ஆய்வக உயிரியல் பாதுகாப்பிற்கான ஆபத்தைத் தடுக்கவும், அடையாளம் காணப்படாத நோய்க்கிருமிகளால் ஏற்படும் இரண்டாம் நிலை பேரழிவுகளைத் தடுக்கவும் அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டது என சீனா விளக்கம் அளித்துள்ளது.
வெள்ளிக்கிழமை, சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் மேற்பார்வையாளரான லியு டெங்ஃபெங்,
கடந்த ஜனவரி 3 ஆம் திகதி சீனா அரசாங்கம், கொரோனாவின் முதற்கட்ட ஆய்வு மாதிரிகளை அழிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதை ஒப்புக்கொண்டார்.
மேலும், இதுபோன்ற வீரியம் மிக்க மாதிரிகளைக் கையாள அந்த ஆய்வகங்கள் அங்கீகரிக்கப்படாதவை என்றும்,
சீன பொது சுகாதாரச் சட்டங்களுக்கு இணங்க அவை அழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் சீனாவில் கொரோனா மாதிரிகளை அவ்வாறான எத்தனை ஆய்வகங்கள் அழித்தன என்ற எண்ணிக்கையை லியு குறிப்பிட மறுத்துள்ளார்.
கொரோனா பரவல் தொடர்பாக தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான இராஜதந்திர உறவுகள் ஆட்டம் கண்டுவரும் நிலையில் இந்த ஒப்புதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவது குறித்து ஆசிய வல்லரசு நாடான சீனா வெளிப்படையாக இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கடந்த மாதம் குற்றம் சாட்டியிருந்தார்.
மட்டுமின்றி, சீன கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் சீனாவின் உள்ளே இருந்து வைரஸ் மாதிரியை வெளி உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவில்லை,
இதனால் நோயின் பரிணாமத்தை கண்காணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஏப்ரல் 22 அன்று பாம்பியோ கூறியிருந்தார்.
மேலும், கொரோனா தொடர்பில் உரிய நேரத்தில் உலக சுகாதார அமைப்பிற்கு சீனா தகவல் அளிக்கவில்லை என்பதையும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என பாம்பியோ சுட்டிக்காட்டியிருந்தார்.
சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, உலகெங்கிலும் 4.59 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர்.
இதில் சிகிச்சை பலனின்றி குறைந்தது 309,000 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.