பிரித்தானியாவில் வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதாக சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கிற்கு சொந்தமான தொலைக்காட்சி சேனலுக்கு 2.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின், ஊடகங்களை கண்காணிக்கும் அமைப்பான ஆப்காம், வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டி விடுவதற்கான உரையை ஒளிபரப்பியதற்காக அமைதி (Peace Tv) உருது மொழி சேனலுக்கு 2 லட்சம் பவுண்டும், அமைதி சேனலுக்கு 1 லட்சம் பவுண்டும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆப்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி தொலைக்காட்சி உருது மற்றும் அமைதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் மிகவும் புண்படுத்தும் உள்ளடக்கம் இருப்பதை எங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டது. இது ஒரு சந்தர்ப்பத்தில் குற்றத்தைத் தூண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த மத போதகரான ஜாகீர் நாயக் (53), வங்கதேச தலைநகர் டாக்காவில் 2016-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவன், தாம் ஜாகீர் நாயக்கின், பேச்சில் கவரப்பட்டு தாக்குதல் நடத்தியதாக கூறியதையடுத்து, ஜாகீர் நாயக்கை கைது செய்து விசாரணை நடத்துமாறு வங்கதேச அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது.
இதையடுத்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டியது மற்றும் கறுப்பு பண மோசடி உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கை, மலேஷியாவில் இருந்து நாடு கடத்தி கொண்டுவருவதற்காக முறையான கோரிக்கையை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.




















