லண்டனில் குடியிருந்துவந்த முன்னாள் இலங்கை கடற்படை வீரர் கொரோனாவுக்கு இலக்காகி மரணமடைந்துள்ள நிலையில், அவரது தகனம் குடும்பத்தார் முன்னிலையில் நடக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள இல்லத்தில் கொரோனா பரவல் காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார் 81 வயதான ஆன்றனி பெர்னாண்டோ.
ஊரடங்கு அமுலில் இருந்து வந்ததால் இவரது உறவினர்கள் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் நகரில் சிக்கியுள்ளனர்.
இதனால் தற்போது அவரது இறுதி நாட்களிலும், தகனம் செய்யப்படுவதற்கு முன்னர் நடத்தப்படும் வழிபாடுகளிலும் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.
இருப்பினும் அவரது அஸ்தியை தபாலில் பெற இருப்பதாக ஆன்றனி பெர்னாண்டோவின் மகன் கொலின் தெரிவித்துள்ளார்.
4 பிள்ளைகளுக்கு தந்தையான 51 வயது கொலின், கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை தமது குடும்பத்தாரை குடியிருப்பிலேயே தங்க கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்னொரு இழப்பை தாங்கிக் கொள்ளும் மன வலிமை தமக்கில்லை எனவும் கொலின் தெரிவித்துள்ளார்.
பக்னால், ஸ்டாஃபோர்ட்ஷயர் பகுதியில் குடியிருக்கும் கொலின் தெரிவிக்கையில், தமது தந்தைக்கு நுரையீரல் தொடர்பான நோய் இருந்ததாகவும், ஏப்ரல் 19 அன்று அவருடன் தொலைபேசியில் உரையாடியபோது, வித்தியாசமாக தாம் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவருக்கு இருமல் அல்லது காய்ச்சல் என எந்த அறிகுறியும் இல்லை என கூறிய கொலின், அடுத்த நாள் அவர் தம்மை அழைத்து, தமக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகப்படுவதாக தெரிவித்ததாக கூறினார்.
தந்தையின் நிலை குறித்து விசாரிக்க லண்டனில் உள்ள நண்பரை தாம் அனுப்பியதாக கூறிய கொலின்,
அந்த நண்பர் குடியிருப்புக்குள் சென்ற வேளை, தமது தந்தை சுய நினைவின்றி சரிந்ததாக கூறினார்.
தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மூச்சுத்திணறலால் கடுமையாக அவதிப்பட்ட ஆன்றனி பெர்னாண்டோ, நான்கு நாட்களுக்கு பின்னர் தூக்கத்தில் மரணமடைந்துள்ளார்.
பயணத்தடைகள் நீடிப்பதால் தங்களால் சென்று காண முடியாத சூழல் என தெரிவித்துள்ள கொலின்,
மருத்துவமனையிலும் அவரை சென்று பார்க்க முடியவில்லை, தற்போது அவரது இறுதிச்சடங்கிலும் பங்கேற்க முடியாமல் போயுள்ளது என்றார்.
இலங்கை கடற்படையில் பணியாற்றிய ஆன்றனி பெர்னாண்டோ 1966 ஆம் ஆண்டு லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
தற்போது கொரோனாவுக்கு பலியான நிலையில், ஊரடங்கு மொத்தமாக விலக்கப்பட்ட பின்னர் லண்டன், ஸ்ரீலங்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் நினைவஞ்சலி கூட்டங்களை முன்னெடுக்க குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.