பிரான்சில் இரண்டு இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Orléans நகருக்கருகில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை, மற்றும் Brittanyயின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை என இரண்டு தொழிற்சாலைகள் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
சுகாதாரத்துறை அதிகாரிகள், Breton இறைச்சி வெட்டும் தொழிற்சாலையில் பணிபுரியும் 209 பணியாளர்களில் 63 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Orléans நகருக்கருகில் அமைந்துள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் 400 பணியாளர்களில் 34 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் அந்த தொழிற்சாலைகளில் சோதனையிட்டபோது, கொரோனா விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் கவனித்துள்ளனர்.
ஆனால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களோ, பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தாலும், உடை மாற்றும் இடம் போன்ற இடங்கள் சிறியவையாக இருப்பதால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கடினமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகளில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, உள்ளூர் கறிக்கடைகளில் இறைச்சி வாங்க அச்சமாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.