கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமுல்படுத்தியதுடன், விமான சேவைகளையும் இரத்துச் செய்தன.
இதனால் மருத்துவம், சுற்றுலா, தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இதேபோல் இலங்கையில் 2,400-க்கும் அதிகமான இந்தியவர்கள் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இவர்களை மீட்பதற்கு இதுவரை சிறப்பு விமானங்கள் எதுவும் இயக்கப்படாததால், அவர்கள் 2 மாதங்களாக சிக்கித்தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நொய்டாவை சேர்ந்த பெண் என்ஜினீயர் வினிதா கூறுகையில்,
“நான் கொழுப்பு நகரில் உள்ளேன். கையில் இருக்கும் பணத்தை கொண்டு, ஒவ்வொரு நாளும் எனது பிழைப்புக்காக நான் போராடி வருகிறேன்” என்றார்.
தனது மனைவியுடன் சுற்றுலா சென்ற விஜய் பால் சிங் என்பவர் கூறுகையில்,
“பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில், விடுமுறையை கழிப்பதற்காக குழந்தைகளை பெற்றோரிடம் விட்டுவிட்டு நானும், எனது மனைவியும் இங்கு வந்தோம். நான்கு நாள் சுற்றுலாவுக்காக இங்கு வந்த நாங்கள் 2 மாதங்களாக சிக்கித் தவிக்கிறோம்” என்றார்.
இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் அங்கு சென்ற சதேந்திர மிஸ்ரா கூறுகையில், “நாங்கள் ஒரு குழுவாக இங்கு இருக்கிறோம்.
இதுவரை இலங்கையில் இருந்து எங்களை வெளியேற்றுவதற்கான எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை” என்றார்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதற்காக பல்வேறு நாடுகளும் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன.
அந்த வகையில் இந்தியாவும் ‘வந்தே பாரத் மிஷன்’ என்ற திட்டத்தை தொடங்கி பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் அண்டை நாடான இலங்கையில் உள்ளவர்களை மீட்பதற்கு மட்டும் இதுவரை எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.