“சிலருக்கு ஆயுத போர் வடிவம் பிடிக்காது. எனக்கும் பிடிக்காது. ஆனால், அது ஒரு போராட்ட வடிவம். அதை தீர்மானிப்பது, அடக்குமுறையாளர்களே என்பதை நான் தெளிவாக உணர்ந்திருக்கின்றேன்” தமிழ் முற்போக்குக் கூட்ணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.
தனது முகப்புத்தகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு
“இன்று பெருந்தேசியவாதம், போர் வெற்றி விழாவை கொண்டாடுகிறது. சிங்களம், பெளத்தம் ஆகிய இரண்டு சிந்தனையோட்டங்களின் ஊடாக தனது அரசியல், இராணுவ பலத்தை உறுதி செய்துகொள்ள இன்றைய ஆட்சி எதுவும் செய்யும். இந்த கொண்டாட்டமும் அதில் ஒன்றுதான்.
“பிறிதொரு அந்நிய நாட்டுடன் போர் செய்யவில்லை”, “உள்நாட்டுக்குள்ளேயே நடந்த போர்”, “இறந்து போனவர்களும் இலங்கையர்களே” என்ற வாதங்கள் எல்லாம், இங்கே எடுபடாது. இந்த இனவாத இறுக்கம்தான், இவர்களது இருப்புக்கு அடித்தளம். இதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
தமிழ் தேசியவாதம் போரில் மரணித்தோரை நினைந்து கதறி அழுகிறது. அஞ்சலி செலுத்துகிறது. போர் வெற்றி விழாவும், அஞ்சலி நிகழ்வுகளும் ஒன்றை ஒன்று ஈடு செய்பவையல்ல. ஒடுக்குவோரின் தேசியவாதமும், ஒடுக்கப்படுவோரின் தேசியவாதமும் ஒன்றுக்கொன்று சமமானவையல்ல.
இனி நாம், “இங்கே இருந்து எங்கே” என சிந்திக்க வேண்டும். வருடாந்த அஞ்சலி ஒன்று மட்டுமே எமது அரசியல் பயணம் ஆகிவிட முடியாது.
நடந்தவைகளுக்கான தீர்வுகளை தேடல், அதேவேளை, இதுபோன்ற அழிவுகள் மீண்டும் நிகழ்ந்துவிடாமலிருக்க வழி தேடல் ஆகிய இரண்டையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வரலாற்றில் தமிழினம் சரியான முடிவுகளையும், பிழையான முடிவுகளையும் ஒருசேர எடுத்துள்ளது. இந்த சரிகளுக்கும், பிழைகளுக்கும் ஒரு கட்சி, இயக்கம், தலைமை பொறுப்பேற்க முடியாது. இவை அனைத்தும் கடந்த சுமார் 80 வருட நிகழ்வுகளின் சங்கிலி தொடர் தொகுப்பு.
இனி, நிகழ்ந்துவிட்ட பிழைகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். எடுத்த சரியான முடிவுகளை இன்னமும் வலுப்படுத்த வேண்டும்.
சாத்தான், வேதம் ஓதும் கதையாக, கொழும்பிலே நெல்சன் மண்டேலாவின் பாரிய சிலையை அமைக்க போவதாக அரசு அறிவித்துள்ளது. நெல்சன் மண்டேலாவின் வாழ்வில் இரண்டு மிக முக்கிய அம்சங்கள் உள்ளன.
ஒன்று, அவர் ஆயுத போராட்டவழிமுறையை ஒருபோதும் நிராகரிக்கவில்லை. “அரச பயங்கரவாதமே எங்களை ஆயுதம் தூக்க வைத்தது” என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார்.
28 வருடங்கள் சிறையில் இருந்த அவரிடம், “ஆயுத வழிமுறையை பகிரங்கமாக நிராகரித்தால், விடுவிக்கப்படுவீர்கள்” என வெள்ளை அரசு பேரம் பேசியும் அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார்.
இரண்டாவது, கடைசியில் விடுவிக்கப்பட்டு, சுதந்திர தென்னாபிரிக்க அரசதிபராக அவர் பதவியேற்றதும், அவரது ஏஎன்சி கட்சிக்குள்ளே, “வெள்ளையரை பழி தீர்ப்போம்” என்ற கருத்து வலுவாக எழுந்தது.
எப்படி ஆயுத வழிமுறையும் ஒரு போராட்ட வடிவம் என்பதை மறுக்க அவர் உறுதியாக மறுத்து விட்டாரோ, அதேபோல், வெள்ளை சர்வாதிகார அரசுக்கு பதில் கறுப்பு சர்வாதிகார அரசை நிறுவி பழி தீர்க்கவும் அவர் உறுதியாக மறுத்துவிட்டார்.
ஆகவே அவர் இன்றும், என்றும், மனிதரில் மாணிக்கமாக எங்கள் மனங்களில் வாழ்கிறார். வாழ்ந்து உலகிற்கு வழி காட்டுகிறார்.
தென்னாபிரிகாவின் பக்கத்து நாடான சிம்பாப்வேயும், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி விடுதலை பெற்ற நாடுதான். ஆனால், முன்னால் போராளியான அந்நாட்டு அதிபர் ரொபர்ட் முகாபே தனது நாட்டை, வெள்ளையரை பழி தீர்க்கும் பாதையில் அழைத்து சென்றதால், இன்று நாடு குட்டிச்சுவராகி இருக்கிறது.
ஒரு விடுதலை போராளியாக உருவெடுத்த ரொபர்ட் முகாபே உலக சரித்திரத்தில் கரும்புள்ளியாக இடம் பெற்று இறந்து போனார். சிம்பாப்வே நாடு ஒதுக்கப்படுகிறது.
மியான்மர் நாட்டு பிரதமர் ஆங் சன் சூகியின் நிலைமையும் இதுதான். ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் மீதான மியான்மார் பெளத்த இராணுவ வெறியாட்டத்தை கண்டிக்க தவறியும், படுகொலைகளை மறுத்தும் அவர் அவர் எடுத்துள்ள புது வடிவம், அவர் மீது உலகம் கொண்டிருந்த மரியாதையை இழக்க செய்துள்ளது.
கனடாவும், சர்வதேச மன்னிப்பு சபையும் அவருக்கு வழங்கியிருந்த விருதுகளை வாபஸ் வாங்கி விட்டன. அவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசும் திரும்ப பெறப்பட வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது. மியான்மர் மீண்டும் ஒதுக்கப்படுகிறது.
ஆகவே இனவாதம் தோல்வியடையும். அதில் சந்தேகம் இல்லை.
இலங்கை தீவில் சிங்கள, முஸ்லிம் மக்களுடன்தான் நாம் வாழ போகிறோம். இதில் மாற்றுக்கருத்து உள்ளவர்களுடன் வாதிட நான் தயாரில்லை.
ஆகவே சிங்கள மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். கஷ்டமான காரியம் என்றாலும், சிலர் நினைப்பது போல் ரொம்ப கஷ்டமான காரியம் இல்லை. 1994, 2001, 2015 ஆகிய காலகட்டங்களில் கணிசமான சிங்கள மக்கள் சமாதானம், சகவாழ்வு என்ற முகாம்களுக்கு வந்தார்கள்.
இன்றைய அரச பெருந்தேசியவாதம்தான், சிங்கள பெளத்தத்தின் அதியுயர் உச்ச கட்டம். இனி மேலே போக இடமில்லை.
ஆகவே அரசியல், பொருளாதார, சமூக, உலக, இயற்கை காரணங்கள் காரணமாக, சிங்கள மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி, இது உடைந்து நொறுங்கும். அதற்கு மாற்று அரசு இதுபோல் வராது.
அப்போது முற்போக்கு, ஜனநாயக சிங்கள மக்களுடன் சேர்ந்துக்கொள்ள நாம் தவற கூடாது. அதுவரை “ஒரே இலங்கை, பல மொழிகள், பல மதங்கள், பல இனங்கள்” என்ற சகவாழ்வுக்கான பரப்புரையை செய்துவர மறக்கவும் கூடாது.
2015க்கு பிறகு நம் கொண்டு வந்த நல்லாட்சியின் மீது பெரும் குற்றப்பட்டியல் இருக்கிறது.
இந்த புதிய ஆட்சி வந்த புதிதில், அந்த குற்றப்பட்டியலை ஆளுகின்ற அரசுக்கு சமனாக, தமிழ், முஸ்லிம் பெருங்குடி மக்களில் ஒரு பிரிவினரே பெரிய எடுப்பில் வாசிக்க தொடங்கினார்கள். இப்போது அந்த வாசனை கொஞ்சம் ஓய்ந்து போய் விட்டது.
என்னிடமும் ஒரு பட்டியல் இருக்கிறது. அது சாதனை பட்டியல். அதில் முதலில் இருப்பதுதான், அஞ்சலி செய்ய, கூட்டம் நடத்த, ஆர்ப்பாட்டம் செய்ய, கடையடைப்பு நடத்த, ஊர்வலம் செல்ல, கேள்வி கேட்க என்று பல்வேறு ஜனநாயக உரிமைகளை படிப்படியாக தேசிய பரப்பில் கொண்ட வந்து நாம் குவித்தோம்.
அவை இயல்பாக தமிழர் பரப்பிலும் பயன்படுத்தப்பட்டன. இன்று மீண்டும் 2015க்கு முந்தைய இறுக்கம் தலை காட்டுகிறது.
ஆகவே அந்த ஜனநாயக இடைவெளியை பாதுகாக்க, நாடு முழுக்க போராட தயாராகும், ஜனநாயக சக்திகளுடன் நாமும் கரம் கோர்ப்போம்.
2009ன் இந்த மாதத்தில் நடைபெற்ற போரை சாட்சியமில்லாத போராக இலங்கை நடத்தி முடித்து விட்டது. இதற்கு உலகம் துணை போனது. இதுதான் உண்மை.
இறுதி தினங்களில், உள்நாட்டு தமிழர்களின் அழுத்தம் காரணமாக, பிரிட்டிஷ், பிரான்சிய வெளிவிவகார அமைச்சர்கள் இங்கே வந்து யுத்தத்தை நிறுத்துங்கள் என ஜனாதிபதி மஹிந்தவிடம் சொன்னார்களே தவிர, உலகம் முழுக்க இலங்கை அரசின் யுத்த முனைப்பின் பக்கமே இருந்தது.
ஆகவே மஹிந்த இவர்களை கணக்கில் எடுக்கவே இல்லை. மில்லிபேன்ட், குச்னர் ஆகிய இருவரையும், மகிந்த கொழும்பில் சந்திக்காமல், தனது ஊருக்கு வரவழைத்து, ஒரு விடுமுறை கூடாரத்தில் சந்தித்தார்.
இவர்கள் இருவரும் கடைசியில், “நாங்கள் பிரபாகரனை காக்க வரவில்லை. மக்களை காக்கத்தான் வந்தோம்” என வாக்குமூலம் கொடுத்தார்கள். “அதெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று மகிந்த கூற, அன்றைய அந்த சோக சூழலில் சிரிப்பு காட்டிவிட்டு, அவர்கள் இருவரும் போயே போய் விட்டார்கள்.
இன்னொரு சிரிப்பு நடிகர் கூட்டமும் இருந்தது.
அரசுடன் போரில் ஈடுபட்டிருந்த புலிகளுக்கு முழுமையான எதிர்ப்பு நிலைபாட்டை இந்திய மத்திய அரசு எடுத்திருந்தது.
இதற்குள், தமிழக அரசியல்வாதிகள் என்ற இன்னொரு சிரிப்பு நடிகர் கூட்டமும், அந்த சோக சூழலில் சிரிப்பு காட்டியது. இவர்களினால் ஒருகாலத்தில் பயன் இருந்ததுதான். பின்னாளில் அது மறைந்தது.
விடுதலை புலிகள் உட்பட, இலங்கை தமிழ் அரசியலர்கள் அந்த கடைசி தருணங்களில் தொலைபேசியில் அழைத்து பேசும் அளவுக்கு இவர்களை அதீதமாக நம்பி ஏமாந்த கதை நீண்டது.
உலகில் எதிரெதிர் தரப்புகளில் இருக்கும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் முதல் கம்யூனிஸ்ட் கியூபா வரை எல்லோருமே தங்கள் முரண்பாடுகளை மறந்து விட்டு, இலங்கை அரசின் பக்கம் நின்றன.
இதை இலங்கை அரசு எப்படி சாத்தியமாக்கியது என நிதானமாக சிந்திக்க வேண்டும்.
மேலே சொன்ன உலக நாடுகள் அனைத்தும் சுத்தமானவையல்ல. ஆனால், உலக ஒழுங்கு (World Order) என்ற ஒன்று இருக்கிறதே!
நாம் மட்டும் என்ன? ரொம்ப சுத்தமானவர்களா? நமக்கு நமது நலன் முக்கியம். அவர்களுக்கு அவர்கள் நலன் முக்கியம். இரண்டு நலன்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும் வாய்ப்புகளை வரலாறு தந்தது. நாம் தவற விட்டோம்.
இனியும் அப்படி வாய்ப்புகள் வரும். அவற்றை நாம் தவற விடக்கூடாது.
குறிப்பாக இந்திய மத்திய அரசு முக்கியமானது. அதை மீறி இந்த பிராந்தியத்தில் எதுவும் நடை பெறாது. அங்கே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நமக்கு அதன் நட்பு முக்கியமானது என்ற அடிப்படை உண்மைகளை முட்டாள்தனமாக மறக்க கூடாது.
போராட்டத்தின் இலக்கை எப்படியும் வரையறுக்கலாம். ஆனால், வன்முறை, போர், போராட்டம் என்று வரும்போது, அது வடக்கு கிழக்கு என்று வரையறை செய்ய முடியாது. நாடு முழுக்க அதன் தாக்கம் இருந்தது. நிகழ்ந்தது.
வடக்கில் சென்று குடியேறிய மலையக பூர்வீக தமிழர்களையும் போராட்டமும், போரும் உள்வாங்கின. மாவீரர்களாக கணிசமான மலையக தமிழர் பங்களித்துள்ளனர். அவர்களின் பெயர்களை அறிவிக்கும் போது, அவர்களின், சொந்த ஊரின் பெயர்களை அறிவிக்க வேண்டாம். அது அங்கே வன்முறையை ஏற்படுத்தும், என அப்போது புலிகள் பொறுப்புடன் முடிவெடுத்திருந்தனர். இது எனக்கு தெரியும்.
இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்கால் வரை புலிகளுடன் சென்று மாண்டவர்களில், மீண்டவர்களில், வன்னியில், கிளிநொச்சியில் வாழ்ந்த மலையக பூர்வீக தமிழர்கள் கணிசமாக இருந்தனர். இருக்கின்றனர்.
இந்த வரலாற்று உண்மையை நாம் மறக்க கூடாது. அந்த இன ஒற்றுமையை அழித்து விட முனைய கூடாது.
போராட்ட வடிவங்கள் காலத்துக்கு காலம் மாறும். ஆகவே அதை, இதை ஏற்கிறீர்களா, இல்லையா என நாம் சண்டையிட்டு காலத்தை வீணடிக்க கூடாது.
“அரச பயங்கரவாதமே எங்களை ஆயுதம் தூக்க வைத்தது” என்ற நிலைபாட்டை கொண்ட, நெல்சன் மண்டேலாவுக்கு இலங்கை அரசே சிலை எடுக்கிறதே! அப்புறம் என்ன?
சிலருக்கு ஆயுத போர் வடிவம் பிடிக்காது. எனக்கும் பிடிக்காது. ஆனால், அது ஒரு போராட்ட வடிவம். அதை தீர்மானிப்பது, அடக்குமுறையாளர்களே என்பதை நான் தெளிவாக உணர்ந்திருக்கின்றேன்.