பிரித்தானியாவின் டீன் வனப்பகுதியில் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் முதன் முறையாக அவரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் அன்று டீன் வனப்பகுதியில் இரண்டு சூட்கேஸ்களில் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் 28 வயதான பீனிக்ஸ் நெட்ஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இறப்பதற்கு முன்னர் பெண்களுக்கான இல்லம் ஒன்றில் பல மாதங்களாக தங்கி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது திடீர் மரணத்தால் கடும் துயரத்திற்கு ஆளானதாக அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதனிடையே வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையின் விசாரணை அதிகாரிகல், பீனிக்ஸ் நெட்ஸ் எங்கு கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
கொலை வழக்காக பதியப்பட்டுள்ள இந்த விவகாரம் தொடர்பில் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில் 27 வயதான பர்மிங்காம் நகரைச் சேர்ந்த ஜமைக்கா நாட்டவரான கரீசா கொனிடா கார்டன் என்பவர் மீது கொலை வழக்கும்,
வால்வர்ஹாம்டனைச் சேர்ந்த 38 வயதான மகேஷ் சொராதியா மீது கொலைக்கு உடந்தை எனவும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இவருக்கு இன்று இந்த வழக்கில் இருந்து பிணை வழங்கப்பட்டுள்ளது.
டீன் வனப்பகுதியில் தாறுமாறாக ஓடிய வாகனம் தொடர்பில் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த வாகனம் பொலிசாரால் சிறிது நேரத்திற்கு பின்னர் மடக்கிப்பிடிக்கப்படவும், அதில் இரண்டு சூட்கேஸ்களில் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
மட்டுமின்றி அவரது உடல் பாகங்களை எரித்து மறைவு செய்ய முயற்சிக்கும் முன்னர் உடலை இரண்டு துண்டாக வெட்டியிருக்கலாம் என பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.