பிரேசில் நாட்டில் ரியோ நகர தெருவில் கொரோனா நோயாளி ஒருவரின் சடலம் சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக அனாதையாக கிடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரேசில் முழுவதும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 20,000 கடந்துள்ளது. தென் அமெரிக்காவில் கொரோனாவுக்கு இலக்கான மிக மோசமான நாடாக பிரேசில் அமைந்துள்ளது.
மேலும் உலகில் கொரோனா பாதிப்பு அதிகம் உறுதி செய்யப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் தற்போது பிரேசில் உள்ளது.
பிரேசில் நாட்டில் மொத்தம் 310,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் உள்ளது.
மார்ச் 18 ஆம் திகதி பிரேசில் நாட்டில் கொரோனாவால் முதல் பலி பதிவு செய்யப்பட்டது. அன்று முதல் வெள்ளிக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில் பிரேசில் முழுவதும் 20,047 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
மருத்துவ நிர்வாகம் மொத்தமாக ஸ்தம்பித்துள்ள பிரேசில் நாட்டின் ரியோ நகரில் 62 வயது வால்னிர் டா சில்வா என்பவரின் சடலம் தெருவில் சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக அனாதையாக கிடந்துள்ளது.
நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே கிடந்த அவரின் சடலம் அருகே, சில அடி தூரத்தில் ஒரு கால்பந்து மைதானம் அமைந்துள்ளது.
அதில் சிறார்கள் கால்பந்து விளையாடியும் வந்துள்ளனர். டா சில்வா திடீரென்று மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட நிலையில்,
அப்பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவர்கள் வந்து சேர்வதற்கு முன்னர் டா சில்வா இறந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆம்புலன்ஸ் வாகனம் சடலத்தை அப்படியே தெருவில் விட்டுச் சென்றதாகவும்,
இது தங்களின் பணி அல்ல என அவர்கள் அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, அந்த வழியாக சென்ற ரோந்து பொலிசாரிடம் நடந்தவற்றை கூறியாதாகவும், அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என டா சில்வாவின் வளர்ப்பு மகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சுமார் 30 மணி நேரத்திற்கு பின்னர் இறுதிச்சடங்கு குழுவினர் வந்து சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
டா சில்வாவின் இறப்புச் சான்றிதழ், அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என்று கூறுகிறது,
இருப்பினும் இது கொரோனா வைரஸ் தொடர்பாக அவர் இறந்தார் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.