கொரோனாவுக்கு அஞ்சி மருத்துவமனைக்கு செல்லாமல், கடைசி நேரத்தில் ஆபத்தானநிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகமருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு, கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டஇரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தனது நண்பரான குழந்தைகள் நலமருத்துவர் ஒருவர் கவலை தெரிவித்ததாக கூறுகிறார், பிரித்தானியாவின் கென்டைச்சேர்ந்த Dr Manpinder Sahota.
தேவையானால் தயவு செய்து மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்ற செய்தியை மக்களுக்கு தெரிவிக்க விரும்புவதாக தெரிவிக்கும் Dr Sahota, குறிப்பாக குழந்தைகளை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்கிறார்.
ஏனென்றால், மிக மிக கவலைக்கிடமான நிலையில் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கிறார் அவர்.
குழந்தைகளுக்கு ஏதாவது உடல் நலக் குறைவு ஏற்படும்போது, அவர்களைமருத்துவமனைக்கு கொண்டு சென்றால் கொரோனா தொற்றிவிடும் என்று அஞ்சி, பெற்றோர் குழந்தைகளை வீட்டிலேயே வைத்துக்கொள்வதால், கடைசியில் வீட்டிலேயே அவர்கள் உயிரிழக்கிறார்கள் அல்லது மிக மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறார்கள் என்கிறார் அவர்.
மருத்துவமனைகள் சுத்தம் செய்யப்படுகின்றன, கிருமிநீக்கம் செய்யப்படுகின்றன என்று கூறும் அவர், கொரோனா நோயாளிகள் தனி இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள், ஆகவே கொரோனா தொற்றுவதற்கு வாய்ப்பு குறைவு என்கிறார்.
இப்படியே போனால், வரும் மூன்று முதல் ஆறு வாரங்களில் கொரோனா அல்லாத பிரச்சினைகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை பயங்கரமாக அதிகரிக்கலாம் என்கிறார் அவர்.
கொரோனா கட்டுப்பாடுகளின்போது மருத்துவமனை ஊழியர்களுக்கு அதிக பாரத்தை ஏற்படுத்தக்கூடாது என்ற எண்ணத்திலும், இப்போது மருத்துவமனைக்கு சென்றால் கொரோனா தொற்றிவிடும் என்ற அச்சத்திலும் மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது கொரோனா தவிர்த்த மற்ற நோய்களால் பாதிக்கப்படும்போது மக்கள் மருத்துவமனைகளை தவிர்ப்பதால், வீடுகளிலேயே முறையான சிகிச்சையின்றி உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.