ஏமன் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் என நம்பப்படுவதாக ஐ.நா சபை எச்சரித்துள்ளது.
ஏழ்மையான நாடான ஏமனில் எப்போதும் உள்நாட்டுப் போர் நடந்த வண்ணமே இருக்கும், இதன் காரணமாகவும் அங்கு பிரதான தொழிலாக இருந்த எண்ணெய் உற்பத்தி குறைந்துவிட்டதாலும் அரேபிய நாடுகளிலேயே ஏமன் மிகுந்த வறுமையில் உள்ள நாடாக இருக்கிறது.
அப்படிப்பட்ட ஏமனில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் என நம்பப்படுவதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
இது குறித்து ஐ.நாவின் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லார்கே கூறுகையில், கொரோனா வைரஸ் ஏமன் முழுவதும் பரவியிருப்பதாக நம்பப்படுகிறது.
அந்நாடு உண்மையில் ஆபத்தின் விளிம்பில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவக்க்கின்றன.
மேலும், அந்நாட்டின் சுகாதார முகமை சரிந்து, சமூக பரவல் அதிகரித்துவிட்டதால் வருங்காலத்தில் அந்நாட்டின் சுகாதார நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தற்போது அந்நாடு சர்வதேச வான்வழியைத் திறந்துள்ளதால் அவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் மருத்துவ உதவிகளை விரைந்து அளிக்க வேண்டும்.
தெற்கு ஏமனில் இருக்கும் முக்கிய கொரோனா வைரஸ் சிகிச்சை மையத்தில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 68 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவ தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.
இந்த எண்ணிக்கை இதுவரை ஏமன் அரசு அறிவித்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. எனவே, அந்நாட்டுக்கு விரைவில் உதவிகளை வழங்க வேண்டும் என லார்கே கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏமனில் இதுவரை 209 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.