கேரளாவில் பாம்பு கடித்து உயிரிழந்த பெண் சம்பவத்தில், அந்த பெண்ணின் கணவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க உத்ரா என்பவரின் மரணம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்ராவின் கணவர் சூரஜ் என்பவரை சுற்றியே தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சூரஜ் ஆபத்தான பாம்புகள் தொடர்பில் இணையத்தில் தகவல் சேகரித்ததாகவும், இவர் பாம்புகளை உயிருடன் பிடிக்கவும், அதை பத்திரமாக பாதுகாக்கவும் தெரிந்த நபர் என பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது சூரஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனெனில் உத்ராவை கடிக்க பாம்பு வேண்டுமென்றே உள்ளே விடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில்,
சூரஜ் பாம்பு பிடிப்பவர்கள் சிலரிடமிருந்து 10,000 ரூபாய்க்கு பாம்பை வாங்கியதற்கான ஆதாரங்களையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இது தற்போது சூரஜ் மீதான சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த மார்ச் மாதம் 2-ஆம் திகதி, பறக்கோடு பகுதியில் உள்ள வீட்டில், இரவு கணவனுடன் தூங்கிக் கொண்டிருந்த உத்ராவை ஏற்கனவே பாம்பு கடித்துள்ளது. அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பினார்.
அதன் பின் மே 7-ஆம் திகதி, உத்ராவை மீண்டும் பாம்பு கடித்துள்ளது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களின் போதும் சூரஜ் அவருடன் இருந்ததால், பொலிசாருக்கு தொடர்ந்து சந்தேகம் வலுக்கிறது.
மேலும், உத்ராவின் நகைகள் மற்றும் பணங்களுக்காக திட்டமிட்டு ஏதோ நடந்துள்ளது. திருமணத்தின் போது மகளுக்கு வழங்கப்பட்ட நகைகள் காணவில்லை என்று அவரின் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, கடந்த மார்ச் 2-ஆம் திகதி காலையில் உத்ராவின் வங்கி லாக்கர் திறக்கப்பட்டிருப்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வங்கி லாக்கர் உத்ரா மற்றும் சூரஜ் ஆகியோரின் கூட்டுக் கணக்கின் கீழ் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.