கொரோனா வைரஸ் தொற்றுநோயின் நிதி தாக்கத்தை குறைக்கும் முயற்சியில், தனது அரசாங்கம் தொழில்துறைக்கான ஆதரவை பெருமளவில் அதிகரிக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உறுதியளித்துள்ளார்..
சுகாதார நெருக்கடி பிரான்ஸ் வாகனத் தொழிலுக்கு பெரிய மற்றும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இது நமது பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும், ஆயிரக்கணக்கான வேலைகள் சம்பந்தப்பட்டவை. எங்கள் ஆதரவு பெருமளவில் அதிகரிக்கும் என்று மேக்ரான் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொற்றுநோயால் பிரான்ஸ் வாகனத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பே ஏற்கனவே போராடி வந்த கார் தயாரிப்பாளர் நிறுவனமான ரெனால்ட் குறித்து நாட்டின் அரசியல்வாதிகள் குறிப்பாக கவலை கொண்டிருந்தனர்.
ரெனால்ட் நிறுவனம் இப்போது முற்றிலும் அழிந்துவிடும், அது கடுமையான நிதி சிக்கலில் உள்ளது என பிரான்சின் நிதியமைச்சர் புருனோ லெ மைர் எச்சரித்தார்.
வடக்கு பிரான்சின் பாஸ்-டி-கலாய்ஸ் பிராந்தியத்தில் உள்ள வலோ ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை வாகனத் தொழில் பிரதிநிதிகளை மேக்ரான் சந்திப்பார்.
கூட்டத்திற்குப் பிறகு அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட நிதி உதவித் திட்டத்தை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை அவர் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.