கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் ஏமன் நாட்டில் பிச்சை எடுத்தல், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக கொரோனாவால் உலக நாடுகளின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு மட்டுமல்லாது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியையும் பல நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர்.
இந்த நிலையில், போரினால் சூழப்பட்டுள்ள ஏமன் மக்களின் வறுமை வாழ்க்கையை கொரோனா மேலும் கீழ்நிலைக்கு இறக்கியுள்ளதாக அங்கு களப்பணியில் ஈடுபட்டு வரும் ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில், எங்களுக்குக் கூடுதல் நிதி கிடைக்கவில்லை என்றால் ஏமனில் எங்கள் உதவிகள் ஒருகட்டத்தில் தடைபடும் நிலை ஏற்படும்.
ஏமனில் நிலவும் தற்போதைய நிலை காரணமாக பிச்சை எடுப்பது, குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணம் ஆகியவை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
ஏமனில் இதுவரை 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் குணமடைந்த நிலையில் 49 பேர் பலியாகியுள்ளனர்.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர்.
ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.