நடிகர் பிரபுதேவாவுடன் “அள்ளித்தந்த வானம்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கல்யாணி. இவர் ஜெயம்ரவியின் ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்திருந்தார். இதன்பின்னர் இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இதனைப்போன்று தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கில் செய்தியாளர்களுக்கு தனது திரையுலக வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
இளம் வயதில் பிரபுதேவாவுடன் நடித்தது எனது அதிஷ்டம் ஆகும். இதன்பின்னர் சின்னத்திரையிலும் நடித்தேன். இப்போது பெங்களூரில் கணவருடன் வசித்து வருகிறேன். எனக்கு கதாநாயகி அந்தஸ்து கிடைத்தும், பெரிய படங்கள் கிடைக்காதது வருத்தமே.. எனக்கும் திரையுலகில் பாலியல் தொல்லை நடந்துள்ளது.
நான் கதாநாயகியாக நடித்த சமயத்தில் எனது அம்மாவிற்கு தொடர்பு கொள்ளும் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், உங்கள் பெண் கதாநாயகியாக நடிக்க எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அம்மா வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து வருவார். இதற்கான அர்த்தம் என்ன என்பது பின்னாளில் தெரியவந்தது.
நடிக்கவே வேண்டாம் என்று எண்ணியதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். தொலைக்காட்சிகளில் இருந்த நேரத்திலும் உயர் அதிகாரிகள் பப்பிற்கு அழைப்பார்கள். மாலை நேரத்தில் காபி ஷாப்பில் சந்திக்கலாம் என்று நான் தெரிவித்த மறுநாளே, அந்த தொலைக்காட்சியில் இருந்து என்னை நடிக்க அழைக்கவில்லை. திறமைக்கு இடம் என்பதே திரையுலகில் இல்லை என்று கூறினார்.