இந்தியாவின் கேரளாவில் இளம் பெண் உத்ராவை அவரின் கணவர் சூரஜ் பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து கொலை செய்தமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
உத்ராவுக்கும் சூரஜுக்கும் 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்து ஒரு வயதில் குழந்தையும் உள்ளது. திருமணத்தின்போது 100 பவுன் நகைகள், ஐந்து லட்சம் ரூபாய், கார் என நல்ல வரதட்சணை கொடுத்துள்ளனர். எனினும் உத்ராவிடம் குறை கண்டுபிடித்த சூரஜ் சத்தமே இல்லாமல் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி பாம்பு பிடிக்கும் சுரேஷ் என்பவரிடம் 10,000 ரூபாய் கொடுத்து பாம்புகளை வாங்கி மனைவியை கொலை செய்துள்ளார்.
முதலில் அணலி பாம்பை வாங்கியுள்ளார். அந்தப் பாம்பு மார்ச் 2 ஆம் திகதி உத்ராவை கடித்தது. அன்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதால் அவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக தாய் வீட்டில் இருந்தார் உத்ரா.
இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி பிளாஸ்டிக் போத்தலில் கருமூர்க்கன் வகை பாம்புடன் உத்ராவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சூரஜ். அன்று இரவு தூங்கிக்கொண்டிருந்த உத்ரா மீது பிளாஸ்டிக் போத்தலில் இருந்த பாம்பைத் திறந்து விட்டுள்ளார்.
உத்ராவை இரண்டு முறை பாம்பு கடிப்பதைப் பார்த்தபடியே நின்றிருக்கிறார் சூரஜ். பின்னர், அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் தூக்கம் வராமல் கட்டிலில் அமர்ந்த சூரஜ் அதிகாலை அங்கிருந்து வெளியறி பாம்பு கொண்டு வந்த போத்தலை வெளியே வீசியுள்ளார்.
பின்னர், உத்ராவின் அம்மா அவரை எழுப்பும்போது அசைவற்றுக் கிடந்ததால் மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற நிலையில் உத்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சூரஜ், தனது மனைவி உத்ராவைக் கொலை செய்தது குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், “உத்ராவிற்கு மனதளவில் சில பிரச்னைகள் இருந்தன. இதனால் அவளைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். நான் சிக்கிக்கொள்ளாமல் இயற்கையாக மரணம் நடந்ததுபோல் நடக்க வேண்டும் என யூடியூபில் தேடினேன். அதில் அப்போதுதான் பாம்பு கடிப்பதன் மூலம் மரணம் அடைவது குறித்து அதிகமான வீடியோக்களைப் பார்த்தேன். பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து உத்ராவைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். இதற்கான பாம்பாட்டி சுரேஷின் உதவியை நாடினேன்.
முதலில் சுரேசிடமிருந்து வாங்கிய அணலி பாம்பைவிட்டு மார்ச் 2 ஆம் திகதி கடிக்கச் செய்தேன். அப்போது உத்ரா சத்தம்போட்டு அலறியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் தப்பிவிட்டார். அணலி வகை பாம்பு கடித்தால் வலி அதிகமாக இருக்கும், ஆனாலும் அவர் இறக்கவில்லை என்பதால் அடுத்தமுறை அதிக விஷம் கொண்ட கருமூர்க்கன் வகை பாம்பை வாங்கினேன். அதை பிளாஸ்டிக் போத்தலில் அடைத்து, பேக்கில் வைத்து உத்ராவின் வீட்டுக்குக் கடந்த 6ஆம் திகதி எடுத்துச் சென்றேன். அன்று இரவு அங்கு தூங்கினேன். அதிகாலை 2.30 மணியளவில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த உத்ராவின் மீது பாம்பு இருந்த போத்தலை வைத்து, அதன் மூடியைத் திறந்தேன். பாம்பு வெளியே வந்து உத்ராவை இரண்டு முறை கொத்தியது. அதை நான் பார்த்துக்கொண்டு நின்றேன்.
பின்னர், பாம்பை மீண்டும் போத்தலில் அடைக்க முயன்றேன். ஆனால், பாம்பு பீரோவின் அடியில் சென்றுவிட்டது. உத்ரா இறந்ததை உறுதிசெய்த பின்பு விடியும்வரை கட்டிலில் தூங்காமல் விழித்திருந்தேன். பொழுது புலரும் நேரத்தில் பாத்ரூம் சென்றபோது பாம்பைக் கண்டேன். உடனே, அடித்துக் கொன்றுவிட்டேன். பின்னர் வீட்டின் வெளியே வந்து பாம்பு கொண்டு சென்ற போத்தலை அருகில் புதர் மண்டிய பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் வந்துவிட்டேன்” என வாக்குமூலத்தில் கூறியதாக அந்த கொடூர சூரஜ் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சூரஜை பொலிஸார் உத்ராவின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர் பாம்பு கொண்டுசென்ற போத்தலைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை , சூரஜின் பெற்றோருக்கும் இந்தக் கொலையில் பங்கிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சூரஜின் வீட்டில் வைத்து பாம்பு இரவு 8.30 மணியளவில் கடித்ததாகவும் ஆனால் அவரை மருத்துவமனைக்கு நள்ளிரவு ஒரு மணிக்குத்தான் அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உத்ராவின் சொத்துகளை அபகரித்துவிட்டு வேறு திருமணம் செய்ய சூரஜ் முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கேரளத்தை உலுக்கிய இந்த நூதன கொலை வழக்கில் உத்ராவின் கணவர் சூரஜ் மற்றும் பாம்பை விற்பனை செய்த சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை நான்கு நாள்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அத்துடன் பாம்பு கொண்டு செல்லப்பட்ட பிளாஸ்டிக் போத்தலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதியில் இருந்தே பாம்பு பிடிக்கும் சுரேஷுடன் சூரஜ் போனில் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில் இன்று சூரஜின் பெற்றோர் மற்றும் சகோதரியிடம் பொலிஸார் விசாரணை நடத்த உள்ளனர்.
உத்ரா கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கருமூர்க்கன் பாம்பை அவரது அறையில் கண்ட உறவினர்கள் அன்றே அதனை அடித்துக் கொன்று புதைத்திருந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக பாம்பைத் தோண்டி எடுத்து நேற்று முன்தினம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
ஃபாரன்சிக் நிபுணர்கள் மற்றும் மூன்று கால்நடை மருத்துவர்களும் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அது மூர்க்கன் வகை பாம்பு எனத் தெரியவந்துள்ளது.
பாம்பின் உடல் அழுகிய நிலையில் இருந்தாலும் விஷப் பல் உள்ளிட்ட வழக்குக்குத் தேவையான பாகங்கள் சேகரிக்க முடிந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பாகங்கள் சோதனைக்காக ஃபாரன்சிக் லேப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை வழக்கில் பாம்புக்கு பிரேதப் பரிசோதனை செய்வது கேரளத்தில் இது முதன்முறை எனக் கூறப்படுகிறது.
நேற்று விசாரணைக்காக வீடு மற்றும் பாம்பு விசிறப்பட்ட இடத்திற்கு சூரஜ் அழைத்து வரப்பட்டபோது, அவரது உறவினர்கள் அங்கு கூடி, சூரஜ் நிரபராதி என கோசமெழுப்பியுள்ளனர்.
அப்போது, “நான் நிரபராதி… நான் பாம்பை பாவித்து மனைவியை கொல்லவில்லை. பொலிசாரே பாம்பை கொண்டு வந்து வைத்துவிட்டு, நான் பாம்பை பாவித்ததாக சொல்கிறார்கள்“ என சூரஜ் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.