இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று முற்பகல் 11.10 மணியளவில் மறைந்த அமைச்சர் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் பிரதி சபாநாயகர், முன்னாள் குழுக்களின் பிரதி தவிசாளர் செல்வம் அடைக்கல நாதன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உடல் ஏந்திய பேழையை பொறுப்பேற்று, பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்துக்கு அரச மரியாதையுடன் எடுத்து சென்றனர்.
அதன்பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பாராளுமன்றத்தை சூழ வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
மேலும் சுகாதார நடைமுறை மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றியே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.