தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிற்கும், இரா.சம்பந்தனிற்குமிடையில் விரைவில் சந்திப்பு நடக்கலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு அனேகமாக இன்று அல்லது நாளை நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பலரும் கண்டணம் தெரிவித்திருந்தனர்.
அதன்பின்னர் இரா.சம்பந்தன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இரா.சம்பந்தன், சுமந்திரன் மிக நெருக்கமானவர்கள் என்பதால், அந்த விதமான அறிக்கையை அவர் வெளியிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்தநிலையில், மாவை சேனாதிராசாவை அகற்றிவிட்டு, எம்.ஏ.சுமந்தினை தலைவராக்க வேண்டுமென கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மூவரும், எம்.ஏ.சுமந்திரன் மீது நடவடிக்யெடுக்க வலியுறுத்தி, இரா.சம்பந்தனை சந்திக்க செல்வதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், அது போலியான செய்தி என்றும் பின்னர் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளின் தலைவர்களும், இரா.சம்பந்தனும் சந்தித்து பேசுவதென அண்மைக்காலமாக திட்டமிடப்பட்டிருந்த போதும், கொரோனா நெருக்கடி காரணமாக அது சாத்தியமாகியிருக்கவில்லை.
இதனையடுத்து சுமந்திரன் சர்ச்சையும் உருவான நிலையில் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கை, தேர்தல் உத்திகள் உள்ளிட்ட கட்சி விவகாரங்கள் பேசப்படும் சந்திப்பொன்று இன்று அல்லது நாளை நடக்குமென தெரிகிறது.
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அஞ்சலி நிகழ்வு இன்று நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறும் நிலையில் அஞ்சலியில் கலந்து கொள்ள அங்கத்துவ கட்சிகளின் மூன்று தலைவர்களும் கொழும்பு சென்றுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில், முன்னர் திட்டமிட்ட சந்திப்பு நடக்கலாமென தெரிகிறது. இந்த சந்திப்பு சுமந்திரனுக்கு எதிரானது அல்லவென்றும் கட்சியின் சமகால விவகாரங்கள் பேசப்படும்போது, சுமந்திரனின் எதிர்ப்புணர்வு கருத்துக்களிற்கு பூட்டுப்போடுவது பற்றியும் கலந்துரையாடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.