வங்கதேசத்தில் உள்ள மருத்துவமனை கட்டிடம் ஒன்றின் கொரோனா பிரிவில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்பட 5 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.
வங்கதேசத்தின் டாக்கா நகரில் குல்ஷான் சந்தை பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு என தரை தளத்தில் தனி பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரிலில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் திடீரென பெரியளவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்த தகவல் அறிந்த விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வார்டில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் என 5 பேப்ர் உயிரிழந்ததாகவும், அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அடையாளத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று குல்ஷான் பகுதியின் காவல் நிலைய பொறுப்பாளர் எஸ்.எம்.கம்ருஸ்ஸாமா தெரிவித்தார்.
இந்த தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவரவில்லை என்றாலும், ஏ.சி. வெடித்து அடுத்தடுத்து தீ பரவியதில் 5 பேரும் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தில் பலியானவர்கள் கொரோனா தொற்று பாதித்தவர்களா அல்லது வேறு நபர்களா என்பது பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளிவரவில்லை. தீயை அணைக்க போதிய வசதிகள் அந்த பிரிவில் இல்லை என தீயணைப்புத் துறை தலைவர் சஜ்ஜத் ஹுசைன் கூறியுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் என்ன? என்பது பற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.



















