சுவிட்சர்லாந்தில் கொரோனா தொடர்பில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த இலங்கையர் திடீரென்று மரணமடைந்த விவகாரத்தில், தற்போது அரசு தரப்பு உத்தியோகப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
St. Gallen மண்டலத்தில் ஜோனா பகுதியில் வசித்து வந்துள்ளார் 59 வயதான அந்த இலங்கையர். இவரது குடும்ப மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,
இவரும் சுய தனிமைப்படுத்தலில் தம்மை உட்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் மார்ச் மாதம் 25 ஆம் திகதி மாலை 5 மணியளவில் இவர் திடீரென்று மரணமடைந்தார்.
குடியிருப்பில் வைத்து 59 வயது நபர் திடீரென்று மரணமடைந்த விவகாரம் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
பொலிசாரும் அரசு தரப்பு மருத்துவர்களும் விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.
இதில், சந்தேகப்படும் வகையில் எந்த நடவடிக்கையும் மூன்றாம் தரப்பினரால் முன்னெடுக்கப்படவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் வியாழனன்று அறிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த காலகட்டத்தில் சூழல் எதுவும் தெளிவான தகவலை தரவில்லை எனவும், அதனாலையே, இறந்தவரின் உடலை மண்டல தடயவியல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக கடுமையான நுரையீரல் சேதத்தில் சுவாசக் கோளாறு ஏற்பட்டதன் விளைவாக இந்த மரணம் நிகழ்ந்தது என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
அரசு வழக்கறிஞரின் கூற்றுப்படி, மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் விசாரணையில் மூன்றாம் தரப்பினரால் எந்தவிதமான கடமையும் மீறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடும்ப மருத்துவரையும் இந்த விவகாரத்தில் குறை சொல்ல முடியாது என தெரிவித்துள்ளனர்.