பொதுத் தேர்தல் நடத்துவதற்கு இன்னமும் மூன்று மாத காலங்கள் கூட ஆகலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை (29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று (28) எட்டாவது நாளாகவும் இடம்பெற்றது.
தேர்தல் நடத்தப்படுமா? அல்லது கால நீடிப்பு வழங்கப்படுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. தற்போது அரசாங்கம் தேர்தலை முடித்து புதிய அரசு அமைவதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
எனினும், தேர்தல் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என்றும், நாட்டின் நெருக்கடியினை கருத்தில் கொண்டு தேர்தலை பிற்போட வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் கோரிக்கை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில், தேர்தல் ஆணைக்குழு தலைவரின் கருத்துக்களை அமைச்சரவை கூட்டத்தின் போது, கோடிட்டுக் காட்டி பேசியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த தேசப்பிரியவின் கருத்துக்களை அவதானிக்கும் பொழுது குறைந்தது மூன்று மாதங்களுக்குப் பின்னரே தேர்தல் நடத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தகவல் வெளியிட்டிருந்த மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி ஒன்பது தொடக்கம் 11 கிழமைக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அடுத்த மூன்று மாதகாலங்களுக்கு தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே தென்படுகின்றன என்று கவலை வெளியிட்டிருக்கிறார்.
இதேவேளை, ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் விடயத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, சில அதிகாரிகளே ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.