இந்தியாவின் கேரள மாநிலத்தில் நாகம் தீண்டி இளம் தாயார் மரணமடைந்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட கணவன் பொலிசாருக்கு இன்னொரு தகவலையும் அளித்துள்ளார்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் பகுதியில் உத்ரா என்பவர் தூக்கத்தில் கொடிய விஷம் கொண்ட நாகம் தீண்டியதால் மரணமடைந்தார்.
இந்த விவகாரம் உத்ராவின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே அவர்கள் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், உத்ராவின் கணவர் சூரஜ் மற்றும் அவரது கூட்டாளி சுரேஷ் என்பவரையும் கைது செய்தனர்.
உத்ராவை கொலை செய்யும் நோக்கில் மார்ச் 2 ஆம் திகதி சூரஜ் முன்னெடுத்த முயற்சியில், உத்ரா நூலிழையில் உயிர் தப்பினார்.
மருத்துவமனையில் சுமார் 10 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சுமார் 10 லட்சம் ரூபாய் செலவிட்டு, உத்ராவின் பெற்றோரே அவரை காப்பாற்றியுள்ளனர்.
இதனையடுத்து பெற்றோருடன் ஓய்வில் இருந்த உத்ராவை மீண்டும் மே 6 ஆம் திகதி சூரஜ் கொடிய விஷம் கொண்ட நாகத்தை பயன்படுத்தி கொல்ல திட்டமிட்டு, அதில் வெற்றியும் கண்டார்.
இந்த இருமுறையும் உத்ரா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில்,
சூரஜ் அந்த உண்மையை பொலிசாரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு முறையும், உத்ராவுக்கு தூக்க மாத்திரை கலந்த பானம் குடிக்கத் தந்ததாக தெரிவித்துள்ளார்.
650 மில்லி கிராம் கொண்ட 2 பராசிட்டமால் மாத்திரைகளை தூள் செய்து உத்ராவுக்கான பானத்தில் கலந்து கொடுத்ததாகவும், இரண்டாவது முறை பழச்சாறில் அதிக அளவு தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் சூரஜ்.
இதனாலையே, கொடிய விஷம் கொண்ட நாகம் தீண்டிய பின்னரும், உத்ரா வலியால் அலறவோ எந்த அறிகுறிகளும் வெளிப்படுத்தவோ இல்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.