வடகொரியாவை விட்டு தப்பி ஓட முயன்ற தம்பதியை, அந்நாட்டு அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
உலகில் இருக்கும் ஒரு சில நாடுகள் எப்போதுமே மர்மம் நிறைந்த நாடுகளாக இருக்கின்றன. அதில் வடகொரியாவும் ஒன்று, இந்த நாட்டில் நடக்கும் எந்த ஒரு விஷயமும் எப்போதும் ரகசியமாகவே வைக்கப்படுகிறது.
அது ஏன், சமீபத்தில், அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் சில நாட்கள் பொதுவெளியில் தோன்றாமல் போக, அவர் இறந்துவிட்டார் என்றெல்லாம் செய்தி வெளியானது. ஆனால் அது பொய் என்று நிரூபிக்கும் வகையில் கிம் ஜாங் உன் உரத்தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அதன் பின் பல்வேறு நிகழ்ச்சிகள், அதிகாரிகளின் கூட்டங்கள் என கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், வடகொரியாவை விட்டு தப்பி ஓட முயன்ற தம்பதி துபாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், வடகொரியாவின் ரியான்காங் மாகாணத்திலுள்ள ஹியென்சன் என்ற இடத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர்.
இவருடன், மனைவியின் இளம் சகோதரரின் 14 வயது மகனும் வசித்து வந்துள்ளார்.
கொரோனா காரணமாக அந்நாட்டில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், தென்கொரியாவை சேர்ந்த அந்த பையனை அவனது சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு தாங்களும் சீனாவிற்கு தப்பியோட நினைத்துள்ளனர்.
இரு நாட்டுக்கும் இடையே, யாலு ஆறு ஓடும் நிலையில் அதன் மூலம் கடக்க முயற்சித்துள்ளனர். ஆனால் வடகொரிய அதிகாரிகள் இருவரையும் பிடித்துவிட்டனர்.
சிறுவனுக்கு 14 வயது என்பதால் அவனை விடுவித்த நிலையில், அந்த தம்பதியை சில நாட்கள் கொடுமைப்படுத்தி பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.