இந்திய ராணுவ வீரர்கள் மீது கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளை கொண்டு சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் சுமார் 8600 ஏக்கர் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல ஆங்கில இணையதளம் ஒன்றின், பத்திரிக்கையாளர் எழுதியுள்ள கட்டுரையில், கடந்த ஒரே மாதத்தில் 35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 3வது வாரத்தில் பனி உருகத் தொடங்கி உடன், Galwan, Pangong, Demchok, Naku La மற்றும் கிழக்கு டோக்லமில் உள்ள 6 ராணுவ முகாம்களை சீனா திறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீனாவின் நடவடிக்கை விபத்தாக நடந்த ஒன்று அல்ல என்றும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று எனவும் கூறப்படுகிறது.
எல்லையில் பாதுகாப்பிற்கு நின்ற இந்தியா ராணுவம் மற்றும் திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை கிலோ மீட்டர் கிலோ மீட்டராக பின்னுக்கு தள்ளி, சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அந்த இணையதளம் குறிப்பிடுகிறது.
மேலும் சியாச்சின் பனிமலையில், இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை மாற்றி அமைக்கவும் சீனா சதி செய்து வருவதாக தெரிகிறது.
லடாக் ஒன்றியப் பகுதியின் வடகிழக்கே, என்ஜே9842 என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்கோடு வரையறுக்கப்படுகிறது.
இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போருக்கு பிறகு, இந்த எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த எல்லைக் கோட்டை பாகிஸ்தானுக்கு ஆதரவாக மறு வரையறை செய்யவும், சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அந்த பகுதியில் பாகிஸ்தானின் ஆதிக்கம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தற்போது இந்தியா, சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து, மத்திய அரசு முழு விபரங்களை வெளியிடவில்லை.
கடந்த 2017 ஆம் ஆண்டு, இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன ராணுவம் நுழைந்தபோது, இரு தரப்புக்கும் இடையே 73 நாட்கள் மோதல் நீடித்தது. இறுதியில் இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றின.
அந்த ஒப்பந்தத்தின் சரத்துக்கள் குறித்து, இதுவரை இரு நாடுகளும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.