இலங்கையை தாக்குதல் இலக்காக சஹ்ரான் ஹாசிம் தெரிவு செய்தமைக்கான காரணங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளித்த இந்த அதிகாரி, 2019இல் நியூசிலாந்தில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழி தீர்க்கவும், ஐஎஸ் அமைப்பினால் இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களை கவரவுமே சஹ்ரான் தாக்குதல்களுக்காக இலங்கையை தெரிவு செய்ததாக குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அன்று தெஹிவளையில் குண்டை வெடிக்கவைத்து தாக்குதல் நடத்தியவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரியே இந்த சாட்சியத்தை வழங்கினார்.
தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவர் தொடர்பில் 2017ம் ஆண்டு காவல்துறை அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் ஊடாக தகவல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஐஎஸ் தீவிரவாதிகளின் அனுதாபியான ஜமீல் மொஹமட் என்ற அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு அதன் தகவல்கள் காவல்துறை அதிபருக்கும் அனுப்பப்பட்டதாக சாட்சி குறிப்பிட்டார்.
இந்த விசாரணைகளின்படி குறித்த சந்தேகத்துக்குரியவர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில்லை என்றும் தமது நண்பர்களையும் அவற்றை பயன்படுத வேண்டாம் என்று அவர் அறிவுரை கூறியுள்ளதாகவும் காவல்துறை அதிகாரி சாட்சியமளித்தார்.
இதேவேளை குறித்த சந்தேகநபர் வெளிநாடு ஒன்றில் ஐஎஸ் குழுவுக்காக சண்டையிட்டு மரணித்த இலங்கையரான நிலாம் என்பவரை சந்தித்துள்ளதாகவும் அதிகாரி சுட்டிக்காட்டினார். எனினும் அவர் ஐஎஸ் தீவிரவாதத்தை சார்ந்திருந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று சாட்சி குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தாக்குதல்களின் பின்னர் சந்தேக நபருடைய வெல்லம்பிட்டிய வீட்டில் இருந்து தீவிரவாதம் தொடர்பான நூல் ஒன்றை தாம் கண்டுபிடித்தாக அந்த அதிகாரி சாட்சியம் வழங்கினார்.
இதேவேளை தாக்குதலுக்கு முன்னர் அவர் தமது மனைவிக்கு அனுப்பிய வட்ஸ்எப் செய்தியில் தாம் தமது மனைவிக்கு உண்மையாக நடந்துகொள்ளவில்லை என்றும் அல்லாஹ்வின் பாதையில் செல்ல தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்திருந்ததாக காவல்துறை அதிகாரி சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
மேலும், ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டவர்களின் காணொளி எனக் கருதப்படும் காணொளி சுமார் 2 மணி நேரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.
இந்த காணொளியில் சுமார் 3 நிமிடங்களே இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் முழு நீளம் 2 மணி நேரத்திற்கும் மேல் என ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ள புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட நபர்களின் கல்கிஸ்சையில் உள்ள இடம் ஒன்றில் இந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் நபர்கள் இலங்கையில் ஹொட்டல்களில் தங்குவதால், அவற்றை இலக்கு வைத்து தாக்குதல் நட்த வேண்டும் என இந்த தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி எனக் கூறப்படும் மொஹமட் சஹ்ரான் ஹசீம் காணொளியில் கூறியுள்ளார்.
நியூசிலாந்தில் நடந்த முஸ்லிம் படுகொலை மற்றும் நாடுகளில் முன்னெடுக்கப்படும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் காரணமாக இந்த தாக்குதலை திட்டமிட்டுள்ளதாக சஹ்ரான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காணொளியில் உள்ள 8 பேரில் தாக்குதலை திட்டமிட்ட மூன்று பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.