ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் போதையின் காரணமாக பெற்ற குழந்தையின் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தையான ரஜிகுமார் இவர் கடற்தொழில் செய்து வருபவராகயிருந்த போதும், மதுப் பாவனைக்கு அடிமையானவராக காணப்பட்டுள்ளார்.
இவரது 09 வயதுடைய மகள் நான்காம் ஆண்டில் கல்விகற்ற போதும், வகுப்பில் முதலாம் அல்லது இரண்டாமிடத்தை பெற்றுக்கொள்ளும் மாணவி ஆவார். மற்றையது நான்கு மாத ஆண் குழந்தை.
வழமையாக அதிகாலையில் கடலுக்கு சென்றால் மதியவேளைதான் வீடு வந்து சேரும் இவர், நேற்றும் (30/05) அவ்வாறே மதியவேளை வீடு வந்து குளித்துவிட்டு, யாருக்கோ பணம் கொடுக்க வேண்டுமென மனைவியிடம் கூறி விட்டு மீண்டும் கடற்கரைக்கு சென்ற இவர், ஒரு மணித்தியாளத்திற்குள் மீண்டும் வீடு வரும்போது அதிகரித்த போதையுடன் வந்துள்ளார்.
போதையுடன் வந்த இவர் நான்கு மாத கைக்குழந்தையை தூக்கியெடுக்கும் போது, குழந்தை அழுததால், குழந்தையை தாய் வாங்கிக் கொண்டு வாசலுக்கு சென்றுவிட்டார்.
தகரத்தினால் வேயப்பட்ட சிறிய வீடென்பதால் வெயிலின் அகோரத்தால் உள்ளே இருக்க முடியாமல்தான் தாய் குழந்தையை தூக்கிக் கொண்டு வாசலுக்கு வந்துள்ளார்.
அவ்வேளை 09 வயது மகள் வீட்டுக்குள் இருந்ததால், அக் குழந்தையோடு உரையாடிக் கொண்டிருந்த இவர்,
“உன்னுடைய அப்பா எப்படி தூக்கிட்டு செத்துப்போனார் ” என்று காட்டுகிறேன் பாரென்று சொல்லிவிட்டு, வீட்டிலிருந்த நீலநிற நைலோன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு வீட்டு வளையில் தொங்க முயற்சிக்கையில்,
குழந்தை எவ்வளவோ தடுத்தபோதும் போதை காரணமாக தொங்கியதால், வாசலில் கைக்குழந்தையோடிருந்த அம்மாவை அழைத்து வந்து, “அப்பாவை வந்து பாரும்மா” என கூறியதும் , நேரடியாக பார்த்த அம்மாவும் மகளுமாக மிக அவசரமாக செயற்பட்டு, கழுத்தில் போடப்பட்ட கயிற்றை கத்தியினால் அறுத்தெடுத்து, கணவரை சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே மரணித்துவிட்டார்.
தூக்கில் தொங்கிய கணவரை மனைவி தூக்கிப் பிடிக்க, 09 வயது மகள் அப்பாவை எப்படியாவது காப்பாற்றிடலாம் என்ற நோக்கில் கதிரையொன்றில் ஏறி நின்று மொட்டைக் கத்தியால் அந்த பிஞ்சுக்கை தன் பலம் கொண்டு அறுத்திருப்பதை சிலும்பிய நிலையிலிருந்த கயிற்றை பார்த்தாலே விளங்குகிறது.
அக் குழந்தையிடம் நடந்த விடயத்தை நேரடியாக கேட்ட போது,
மரண விசாரனை அதிகாரி, பொலிஸார் மற்றும் அருகாமையில் நின்றோர் அனைவருமே கண்கலங்கி நின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட இவரது தந்தையும் மூன்று வருடங்களுக்கு முன்பு தூக்கிட்டு மரணித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போதையிலிருந்து விடுபடாதவரை தற்கொலை மரணங்களை சந்தித்துக் கொண்டேயிருப்போம்.
அன்பு நன்பர்களே தற்கொலை பதிவுகளை பதிவிட எனக்கும் விருப்பமில்லை.
ஆனால் இந்த பதிவு மூலம் எமது சமுகத்தில் ஏற்படும் மோசமான அனுபவத்தை நான் நேரடியாக அறிவதிலிருந்து ஒரு செய்தியை சொல்ல எத்தனிக்கின்றேன் என முகநூல் ஆர்வலர் (Rednathurai haran)ரெட்னதுறை ஹரன் தெரிவித்துள்ளார்.