தமிழ் மக்கள் வெறும் பொருளாதார அபிவிருத்தியையே நாடி நிற்கின்றார்கள் என்று பிரதமர் கூறுவது எமது வழி வகையற்ற பாதிக்கப்பட்ட மக்களை எலும்புத் துண்டுகளைக் கொடுத்து தன்பக்கம் ஈர்க்க முடியும் என்று அவர் எண்ணுவதாலேயே. எமது அரசியல்வாதிகள் பலர் பாதை மாறிச் செல்வது உண்மையே.
ஆனால் எமது மக்கள் தமது உரிமைகள் பற்றியும் வருங்காலம் பற்றியும் போதிய விழிப்புடன் தான் இருக்கின்றார்கள்.
மக்களின் மனம் அறிந்த அரசியல்வாதிகள் வெகுவிரைவில் பாராளுமன்றத்தை அலங்கரிக்க வர இருக்கின்றார்கள் என்பதை அவருக்குக் கூறிவைக்கின்றேன் என தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஸ்வரன்.
அவர் இன்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில்,
கேள்வி – தனிநாட்டு சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பல திட்டங்கள் மூலம் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகள் வேறு வேறு என்றும் பிரதமர் மகிந்த இராஜபக்ச அண்மையில் இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளாரே.
அத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளை தனிநாடாக்க வேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியமான கோரிக்கை அல்ல என்றும் கூறியுள்ளார். அவை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் – அவர் கூறியவற்றை ஒவ்வொன்றாக எடுத்து பதில் தருகின்றேன்.
தனிநாட்டுச் சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும்.
அன்பார்ந்த பிரதமருக்கு பல விடயங்கள் தெரியவில்லை அல்லது மறந்துவிட்டார் போல் தெரிகின்றது.
இப்பொழுதும் வடக்கு கிழக்கு தனிப்பட்ட பிரதேசமே. அங்கு பெரும்பான்மையர் தமிழ் மொழி பேசுவோர். இவர்கள் வாழையடி வாழையாகத் தொடர்ந்து 3000 வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்குப் பிரதேசத்திலும் அவற்றைச் சார்ந்துமே வாழ்ந்து வருகின்றார்கள்.
அங்கு தற்போது வாழும் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் அல்ல. அவர்கள் இந்து மக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறீஸ்தவர்களே.
அவர்களின் இடங்கள் உலர்ந்த வலயத்திற்கு உட்பட்டன (Dry Zone). மற்றைய ஏழு மாகாணங்களும் ஈர வலயத்திற்கு உட்பட்டன (Wet Zone).
வடகிழக்கு மக்களுக்கென்று பிறிதான மொழி, கலை, கலாச்சாரம், பாரம்பரிய கைத்தொழில்கள் உள்ளன.