அமரர் ஆறுமுகம் தொண்டமான் இனவாத அடிப்படையில் செயற்பட்டதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் இவ்வளவு சீக்கிரம் எம்மை விட்டு பிரிவார் என தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வூட் மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இறுதியாக சந்தித்த போது கூட மலையக பெருந்தோட்ட மக்களின் நலன்கள் பற்றியே ஆறுமுகம் தொண்டமான் கலந்துரையாடினார்.
அரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு இன, மத அடிப்படையில் பலரும் செயற்பட்டு வரும் நிலையில், தொண்டமான் குடும்பம் அவ்வாறு செய்தது கிடையாது.
மலையக மக்களின் உரிமைகளை உறுதி செய்வதனையே தொண்டமான் நோக்கமாகக் கொண்டிருந்தார்.
இறுதியாக அவரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் அவரது மறைவின் பின்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எம்மால் முன்வைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறான ஓர் சந்தர்ப்பத்திலும் மலையக பெருந்தோட்ட மக்களை வேறும் வகையில் விளிக்காது, எனது மக்கள் என்றே தொண்டமான் விளிக்க பழகிக்கொண்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.