கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பொதுமக்களை கைதுசெய்ய முற்பட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் தற்போது பதற்றமான சூழல் காணப்படுகின்றது.
குறித்த பகுதியில் நெற்செய்கை காணி தொடர்பில் நீண்ட கால பிரச்சினை காணப்படும் நிலையில், அப்பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனத்தையும், பிரதேசவாசிகள் சிலரையும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்ய முற்பட்டதனால் பதற்றமான நிலை தோன்றியுள்ளது.
கைதுசெய்தவர்களை ஏற்றியவாறு புறப்பட்ட வாகனத்தை பிரதேச மக்கள் ஒன்று கூடி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினரும், பொலிசாரும் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசம் பதற்றத்துடன் தற்போது காணப்படுகின்றது.