மே 21-ம் திகதியுடன் கொரோனா வைரஸ் இந்தியாவை விட்டு வெளியேறிவிடும் என ஆருடம் கூறிய பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலாவின் மரணம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பேஜன் தருவாலா. இவர் ஜோதிடத்தில் உலகப்புகழ் பெற்றவர்.
உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் பேஜன் தருவாலாவிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக அகமதாபாத்தில் குவிவார்கள். அந்தளவிற்கு அவரது கணிப்புகள் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.
மோடி பிரதமராக வருவார் என இவர் ஏற்கனவே கணித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ராஜீவ்காந்தி, சஞ்சய்காந்தி ஆகியோரின் மரணம் தொடர்பாகவும் இவர் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் வளர்ச்சி, அழிவு உள்ளிட்டவற்றையும் தனது ஜோதிடம் மூலம் அவ்வப்போது அறிவித்து வந்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் , மே 21-ம் தேதியுடன் இந்தியாவை விட்டு போய்விடும் என கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இவர் கணித்திருந்தார்.
மேலும், இந்தியாவில் இந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும், அடுத்தாண்டு பீனிக்ஸ் பறவை போல் இந்தியா எழுந்து நிற்பதோடு சாதிக்கவும் செய்யும் எனக் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையை அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடத்திய சோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அகமதாபாத் மாநகராட்சி வெளியிட்ட கொரோனா தொற்றுள்ளவர்கள் பட்டியலில் பேஜன் தருவாலா பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மே 21-ம் திகதியோடு கொரோனா இந்தியாவை விட்டு போய்விடும் என அவர் கூறியிருந்த நிலையில் மே 31-ம் தேதியான இன்று வரை கொரோனா இந்தியாவை விட்டு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.