பொள்ளாச்சியில் வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில் அவர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கும், டெல்லியில் வேலை பார்த்த இளைஞர் ஒருவருக்கும் தாளக்கரை ஊராட்சியில் திருமணம் நடைபெறுவதாய் இருந்தது.
ஆனால் போக்குவரத்து வசதி ஏதும் இல்லாததால் மணமகன் கடந்த 29ம் திகதி தன்னுடைய குடும்பத்தினருடன் டிராவல்சில் சென்னை வந்துள்ளார்.
இவர்களுடன் தேனியை சேர்ந்த மூவரும் பயணித்துள்ளனர், அவர்கள் திண்டுக்கல்லில் இறங்கிவிட மணமகனின் குடும்பத்தினர் தாளக்கரைக்கு வந்துள்ளனர்.
இங்கு மணப்பெண்ணின் வீட்டில் ஜோராக ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், மணமகன் குடும்பத்தினர் உறவினர் வீட்டில் தங்கவைக்கப்பட்டனர்.
இதற்கிடையே தேனி வந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தாளக்கரை ஊராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அதிகாரிகள் வந்து சோதனையிட்டதில் மணமகனின் குடும்பத்தினருக்கு கொரோனா இருப்பதும் உறுதியானது.
இதனையடுத்து அதிகாரிகள் உத்தரவுப்படி திருமணம் நிறுத்தப்பட்டது, இவர்களை அழைத்து வந்த டிரைவருக்கு கொரோனா இல்லை என்ற போதும் தனி வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.