மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகள், தந்தையின் நினைவுகள் குறித்து உருக்கமான கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டின் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்புத் துறை அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கடந்த 26ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
அவரைக் காண விமானம் மூலம் இலங்கை வந்த அவரது மகளும், மருத்துவருமான நாச்சியார் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தந்தையின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நாச்சியார், மறைந்த தனது தந்தைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “அன்புள்ள அப்பா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? நீங்கள் எங்களை விட்டு பிரிந்துவிட்டீர்கள் என்ற அந்த மோசமான அழைப்பு சில நாட்களுக்கு முன்னர் எனக்கு வந்தது. முடிவில்லா கண்ணீருடன் சில மணி நேரம் பயணித்து நான் வீட்டிற்கு வந்தும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இந்த நோய் இன்னும் என்ன செய்யும் ?, எத்தனை பேரின் உயிரை பறிக்கும் என்று நினைக்கிறேன். இருப்பினும் எனது கோபம் நான் ஒரு மருத்துவர் என உணரும்போது இல்லாமல் போகிறது” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை கொரோனாவிலிருந்து மீண்டு வரும் என நம்பியதாகவும், கொரோனாவுக்கு எதிராக போராடிய அரசுக்கு பாராட்டுக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு மகளாக தந்தையை பார்க்க முடியவில்லை என்பது கோபத்தை ஏற்படுத்துகிறது. நான் இப்போது உங்களுடன் இருக்க நினைத்தாலும், முகக்கவசம் மற்றும் 4 சுவர்களுக்கு இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து வெளியேற நினைப்பதாகவும் இருந்தாலும் அதற்கு தன்னிடம் சரியான விடை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். நான் சரியான ஒன்றை செய்வதாகவும், இது தனது கடைமை என குறிப்பிட்டுள்ள நாச்சியார், இதை தாங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது தனக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் ஆரம்பத்தில் தன்னை மருத்துவராக்க தாங்கள் முயன்ற போது, அதை புரிந்துகொள்ளவில்லை என்றும், இரவுப் பணிகளை மருத்துவராக மேற்கொண்ட போது தங்களிடம் சண்டையிட்டதாகவும் தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் நாச்சியார் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதன் காரணமாக குடும்ப நிகழ்ச்சிகளை தவறவிட்டதுடன், உங்களை பலமுறை குற்றஞ்சாட்டினேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக “நீங்கள் எங்கு சென்றிருந்தாலும் முகமூடி அணிந்திருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் அது உங்களுக்கு பிடிக்காது என்று எனக்கு தெரியும்” எனவும் மறைந்த அமைச்சர் தொண்டமானின் மகள் நாச்சியார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.