கஸ்டத்திலேயே பிறந்து, கஸ்டத்திலேயே வளர்ந்து சிறுவயதிலேயே தாயை இழந்து வறுமையை நிலையாக கொண்டு வாழ்ந்த ஷியாமியா (24) என்ற பெண்ணே மரணமடைந்தவராவார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு ஊருகொடவத்தையை பிறப்பிடமாக கொண்ட நவாஸ் முகம்மது சபீக் என்பவனை கடந்த 26-05-2020 அன்று திருமணம் முடித்திருக்கிறார்.
இவன் ஏற்கனவே ஏறாவூர், தைக்கா வீதியில் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தந்தையாகிய நிலையில் அண்மையில்தான் அம் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று இரண்டாவதாக இப் பெண்ணை திருமணம் முடித்திருக்கிறான்.
இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இவன் குளித்துவிட்டு அருகாமையிலுள்ள வீட்டில் பேசிக் கொண்டிருந்த வேளை, பெண்ணின் உறவுக்கார பெண்மணியொருவர் இப்பெண்ணை சந்திக்க சென்றபோதே கட்டிலில் உணர்வற்று கிடப்பதைக் கண்டு அவசரமாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவந்தபோது, கடமையிலிருந்த வைத்தியர் மூலம் இப் பெண்ணின் மரணம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
பிரேதத்தின் கழுத்தில் பல இடங்களில் நகக்கீறுகள் போல் மற்றும் சங்கிலி இறுக்கியது போல் அடையாளம் காணப்பட்டதால் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கணவன் ஏறாவூர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரனைகள் தொடர்கின்றது.
தடயவியல் பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டதோடு, கௌரவ நீதிபதியும் சம்பவ இடத்துக்கு சமூகமளித்து நிலைமைகளை அவதானித்த பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.