கருப்பினத்தவரான ஜார்ஜ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் அவருக்கு ஆதரவு தெரிவித்தும், அவரது கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்களும் பேரணிகளும் நடந்து வருகின்றன.
அத்தகைய பேரணி ஒன்றில் ஒரு கூட்டம் கருப்பினத்தவர் முன் நின்றிருந்த பொலிசார் அனைவரும் சட்டென முழங்கால் படியிட்டு தங்கள் ஆதரவை கருப்பின சகோதர்களுக்கு தெரிவித்த ஒரு நிகழ்வு அமெரிக்காவில் நிகழ்ந்தது.
அதேபோல், ஜார்ஜ் நடமாடிய, சமூக சேவை செய்த டெக்சாசிலுள்ள ஒரு இல்லத்தின் முன் கூடிய வெள்ளையின கிறிஸ்தவர்கள் சிலர், கருப்பினத்தவர்கள் முன்பு மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர்.
‘இறைவா! ஆண்டாண்டு காலமாக எங்கள் கருப்பின சகோதர சகோதரிகளுக்கு இழைக்கப்பட்ட இனவெறிக்கொடுமைக்காக நாங்கள் மன்னிப்புக்கோருகிறோம்’ என்று ஒருவர் பிரார்த்திக்க, அவருடன் இருந்த அனைவரும் கருப்பினத்தவர்கள் முன்பு முழங்கால் படியிட்டு பிரார்த்தனை செய்வதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.
மற்றொரு வீடியோவில், கண்களை மூடி, தனது கையை தன் நெஞ்சில் வைத்திருக்கும் ஒருவர் மனமுருக, எனக்குள் இருக்கும் இந்த அதிபயங்கர இனவெறியை வெளிக்கொணர தைரியம் கொண்ட எனது வெள்ளையின, கருப்பின, பழுப்பின சகோதர சகோதரிகளுக்காக பிரார்த்திக்கிறேன், பயத்திலிருந்தும், அவநம்பிக்கையிலிருந்தும் அவர்கள் விடுதலை பெற பிரார்த்திக்கிறோம் என பிரார்த்திப்பதையும் காணமுடிகிறது.
அவர்கள் பிரார்த்திப்பதைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறும் கருப்பினத்தவர்கள், தாங்களும் முழங்கால் படியிட்டு அவர்களுடன் பிரார்த்தனை செய்வதையும் காணமுடிகிறது.
ஒரு மனிதனின் கழுத்தின் மீது பொலிசார் முழங்காலை வைத்து அழுத்துவதையா, அல்லது ஒற்றுமையையும் அமைதியையும் காட்ட முழங்கால்படியிடுவதையா, எதை விரும்புகிறோம்? என கேள்வி எழுப்புகிறார் அப்பகுதி பாதிரியார் ஒருவர்.