தமிழகத்தில் மண்எண்ணெய் ஊற்றி மாமியாரை எரித்து கொன்ற மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் மணியம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் அரங்குளவன்(60). இவருடைய மனைவி ராஜம்மாள் (55). இவர்களுக்கு 2 மகள்களும், ரமேஷ்(28) என்ற மகனும் உள்ளனர்.
இவருக்கும், வன்னியம்பட்டியை சேர்ந்த பிரதீபாவுக்கும் (23) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தீயில் உடல் கருகிய நிலையில் ராஜம்மாள் கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரதீபாவின் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில், ராஜம்மாள் எரித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும், ராஜம்மாள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கணவருடன் பேசுவதை தடுத்ததாகவும், அதனால் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகவும், பிரதீபா கூறியதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து பிரதீபாவை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.