வடமேற்கு லண்டனில் நடந்த ஒரு சம்பவத்தின் போது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இரண்டு வயது சிறுவன் கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதனன்று இரவு சுமார் 9.45 மணியளவில் ஹார்லஸ்டனில் உள்ள எனர்ஜென் க்ளோஸ் பகுதியில் இருந்து அவசர உதவிக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நால்வருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தகவலறிந்து விரைந்து சென்ற அவசர உதவிக் குழுவினர், தாயார் மற்றும் 2 வயது சிறுவன், 18 மற்றும் 19 வயதில் இரு இளைஞர்கள் என நால்வருக்கும் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த அதிகாரிகள், ஒரு துப்பாக்கிதாரி அந்தக் குழுவை அணுகி, திடீரென்று அவர்கள் மீது பலமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கொலை முயற்சியில் சிக்கிய தாயின் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில் கை, மார்பு, பின்புறம் மற்றும் காலில் எட்டு முறை அந்த நபர் சுட்டதாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கும் இளைஞர்களுக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்றார்.
மேலும், அந்த துப்பாக்கிதாரி 2 வயது சிறுவனின் மிக அருகாமையில் வந்து துப்பாக்கியால் சுட்டதாகவும்,
அந்த துப்பாக்கி குண்டு குழந்தையின் தலையை துளைத்து மறுபக்கம் வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த தாயார் அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன், கோமா நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் தங்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை எனவும், கண்காணிப்பு கெமாராவில் சிக்கியுள்ள காட்சிகளை பயன்படுத்தி விசாரணையை முன்னெடுக்க வேண்டும் எனவும், தங்கள் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோமா நிலையில் இருக்கும் குழந்தையின் நிலை ஆபத்து கட்டத்தில் இருப்பதாகவும், ஆனால் உயிருக்கு சிக்கல் இல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.