ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பொறுப்பு கூற வேண்டும். கட்சியின் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பிறரை விமர்சிப்பது பயனற்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியினை பிளவுப்படுத்த ஆளும் தரப்பினர் எவ்வித நடவடிக்கையினையும் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித், ஐ.தே.க தலைமைத்துவத்திற்கும், கட்சி கொள்கைக்கும் எதிராக செயற்பட்டார். இவ்வாறான செயற்பாட்டின் காரணமாகவே ஐ.தே.க பிளவுப்பட்டுள்ளது.
இதற்கு இவர் மாத்திரமே பொறுப்பு கூற வேண்டும். பழமை வாய்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் இன்றைய நிலை கவலைக்குரியது.
இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிட்டால் படுதோல்வியடைவார் என்பதை அறிந்தே, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு கட்சி மட்டத்தில் தீர்மானித்துள்ளார்.
அரசாங்கம் பொருளாதார முன்னேற்றம் குறித்து அதிக அவதானம் செலுத்தியுள்ளது. பிற கட்சியின் உள்ளக பிரச்சினையில் தலையிட வேண்டிய தேவை பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது என்றார்.