அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்திற்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த வாரம் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட், பொலிசாரின் பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் அனைத்து நகரங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில், இந்த இனவெறிக்கு எதிராக நடக்கும் போராட்டத்துக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தும் போராட்ட களத்தில் இருக்கும் இளைஞர்களுக்குத் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாக வீடியோ மூலம் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், உங்களுக்குச் சேவை செய்து பாதுகாக்க வேண்டியவர்களாலேயே பெரும்பாலும் வன்முறைகள் வந்துகொண்டிருகின்றன.
நீங்கள் மிக முக்கியமானவர்கள், உங்கள் வாழ்க்கை முக்கியமானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். உங்கள் கனவுகள் முக்கியம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
ஆப்பிரிக்க – அமெரிக்க மக்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள்தான் அதிகமாகக் கலந்துகொண்டுள்ளனர். அவர்களின் செயல்பாடு பெரிய மாற்றத்துக்கு உத்வேகமாக அமையும். அமெரிக்கா, தன் அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான கொள்கைகளில் சில திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.
கடந்த வாரம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வரலாற்று நிகழ்வுகள் நம் நாட்டில் நடந்தன. பலரது மனங்களில் மாற்றம் வந்துள்ளது.
அமெரிக்கா ஒரு சமூகமாக ஒரே நாடாக உருவாக இதைப் பயன்படுத்துவோம். இந்தச் சூழல் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டில் உள்ள அனைத்து மேயர்களும் அதிகாரங்கள் தொடர்பான கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.