சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் கணவனுடன், மனைவி இலங்கை சென்றிருந்த நிலையில், தற்போது இருவரும் தமிழ்நாட்டிற்கு திரும்ப முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தில் இருந்து, கடந்த பிப்ரவரி மாதம் ஏராளமானோர் ஜவுளி வியாபாரத்திற்காக இலங்கை சென்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரம் செய்ய முடியாமலும், பிழைப்பிற்கு வழியில்லாமலும் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
கடந்த 1-ஆம் திகதி இலங்கையில் இருந்து கப்பல் மூலமாக ராமசாமிபட்டியை சேர்ந்த 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 33 பேர் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி கலெக்டர் 33 பேரையும், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவிடம் ஒப்படைத்தார். இந்த 33 பேரும் தற்போது ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் ராமசாமிபட்டியில் இருந்து இலங்கை சென்ற வடிவேல்குமார் – பாலாமணி தம்பதி, தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் 2 குழந்தைகளை ராமசாமிபட்டியில் உள்ள உறவினர்கள் வீட்டில் விட்டு விட்டு இலங்கை சென்றுள்ளனர்.
தற்போது வடிவேல்குமாருக்கு 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு, கொழும்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உணவுக்கு வழியின்றியும், மருந்துகூட வாங்க முடியாமலும் பரிதவித்து வருகின்றனர். இத்தம்பதியர் விமானம் மூலம் தமிழகம் வருவதற்கு 16 ஆயிரம் ரூபாயும், தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நாள் ஒன்றுக்கு 2,500 ரூபாய்வேண்டுமென இந்திய தூதரகம் கூறிவிட்டது.
இதுகுறித்து பாலாமணி செல்போனில், பிழைப்பிற்காக வந்த நாங்கள் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். இவ்வளவு பெரிய தொகைக்கு நாங்கள் எங்கு செல்வோம்? தமிழக அரசு எங்களை மீட்டு, எனது கணவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.



















