கடந்த 2003ஆம் ஆண்டு இந்தியாவின் ஐ.ஓ.சீ. நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட திருகோணமலை எரிபொருள் குதாம்கள் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளன.
இலங்கை அரசாங்கம் மேற்படி எரிபொருள் குதங்களில் 25ஐ மீளப் பெற்றுக்கொள்வதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அந்த நிறுவனத்திடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காத நிலையில் மேற்படி நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.
அந்த நெருக்கடி நிலையை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கத்தினதும் இந்திய அரசாங்கத்தினதும் உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உலகச் சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் எரிபொருளை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதற்காக மேற்படி 25 எரிபொருள் குதங்களையும் மீளப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேயுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது ஐஓசி நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமானதல்ல என்றும் அது ஒரு தனியார் நிறுவனம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



















