ஆயுத, மிதவாத தலைவர்கள் பலரிற்கு அரசாங்கம் அவ்வப்போது வீடுகள் வழங்கியிருந்தாலும், அவை குறிப்பிட்ட காலகட்டத்திற்குரியவை. எனினும் அதற்கு பின்னரும் , கடந்த சில தசாப்தங்கில் அதிக உரித்துடன், மிதவாத தலைவர்களிற்கே அரசாங்கம் வீடுகளை வழங்கியுள்ளது. அந்தவகையில், 3 தமிழ் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்திடமிருந்து இவ்வாறு வீட்டை பெற்றிருந்தார்கள்.
அந்தவகையில் இரா.சம்பந்தன், ஆனந்தசங்கரி மற்றும் கி.துரைராசசிங்கம் ஆகியோர் இவ்வாறு அரசாங்கத்திடம் இருந்து வீடுகளை பெற்றுள்ளார்கள்.
இதன்படி சம்பந்தன் வீட்டை பெற்ற விவகாரம் இரகசியமல்ல. அமைச்சரவை பத்திரத்தின் மூலமாக சொகுசு பங்களாவொன்று இரா.சம்பந்தனிற்கு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த ஐ.தே.க அரசில் புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் இழுத்தடிப்புக்கள் நடந்தபோது, அதில் அதிக அழுத்தத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரயோகிக்க முடியாமல் போனமைக்கு இந்த வீடு போன்ற சில பல சலுகைகள் முக்கிய காரணமாக அமைந்தது.
ஏற்கனவே சம்பந்தனிற்கு பழைய வீடொன்று வழங்கப்பட்டிருந்த போதும் அதிக படியேற வேண்டுமென கருதி, 2015இல் கொழும்பில்- ஐ.தே.க தமிழ் பெண் பிரமுகர் ஒருவரிற்கு சொந்தமான- வீட்டை மாத வாடகையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றது.
இரா.சம்பந்தன் மாடிப்படியேற சிரமம் என்றதால், அவர் புதிய வீட்டில் குடியிருக்க, ஒரு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் இயங்குமென்பது திட்டம்.
கனடாவிலிருந்து கொண்டு பணத்தின் மூலம் இலங்கையில் கூலிப்படை அரசியல் செய்யலாமென நினைக்கும் தமிழ் அரசு கட்சி கனடா கிளையென சொல்லும் கும்பல் வழக்கம் போல அந்த வீட்டிற்கான செலவை ஏற்றிருந்தது. இதற்காக அலுவலக தளபாடங்கள், கணினி கொள்வனவு செய்யப்பட்டது. எனினும் , அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என இரா.சம்பந்தன் தெரிவித்து விட்டார்.
அதுபற்றி அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, தனது வீடு இராசியானது, அதைவிட்டு வர மாட்டேன் என காட்டமாக சம்பந்தர் தெரிவித்திருந்தார்.
இதே சம்பந்தன்தான், அரசிடம் வீடு வாங்கிய தகவல் வெளியானதும், பழைய-மாடிப்படியேற சிரமமான வீட்டிலிருந்து- சௌகரியமான வீட்டிற்கு குடிபெயர்ந்ததில் என்ன தவறு என கேட்டார் என்பதும் இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம் .
அதேபோல இரா.சம்பந்தன் வீடு வாங்கி விட்டார் என ஆனந்தசங்கரி நாளொரு அறிக்கை விட்டபடியிருந்தார். சலுகைக்கு விலை போய் விட்டார்கள், தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைத்து விட்டார்கள் என , அரசாங்கம் வழங்கிய வீட்டில் இருந்தபடி அறிக்கை விட்டுக் கொண்டிருந்ததுதான் வேடிக்கையானது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டு அதுவும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத, தனது அந்திமக்காலத்தில் அந்த வீட்டை பெற்றிருந்தார் ஆனந்தசங்கரி.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி இருவரதும் வீடுகளும் அவர்கள் உயிருடன் இருக்கும் வரை பாவிக்கலாம்.
அடுத்ததாக சம்பந்தன், சங்கரி இருவரைப் போலல்லாமல், கொழும்பில் நிரந்தரமான வீடொன்றை இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் மட்டுமே பெற்றிருந்தார் என பேச்சுண்டு.
கடந்த 1994ம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி ஊடாக மட்டக்களப்பில் மறைந்த ஜோசப் பரராசசிங்கம், பொ.செல்வராசா, கி.துரைராசசிங்கம் ஆகிய மூவரும், திருகோணமலையில் தங்கத்துரையும் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களாக வாக்களிப்பு மூலமாக தெரிவானார்கள் தேசியப்பட்டியல் உறுப்பினராக நீலன் திருச்செல்வம் நியமிக்கப்பட்டார்.
பின்னர் நீலன் திருச்செல்வம் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரின் இடத்திற்கு மாவை சேனாதிராசா தெரிவானார். திருகோணமலையில் தங்கத்துரை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரின் இடத்திற்கு அடுத்த விருப்பு வாக்குகளைபெற்ற இ.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றனர்.
சந்திரிகா அரசு அப்போது வீடமைப்பு நிரமானத்துறை அமைச்சர் ஊடாக தமக்கு சார்பான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாக கொழும்பில் மொறட்டுவை சொய்சாபுரவில் இலவசமாக மாடிவீட்டுத்திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்டன.
தமிழர் விடுதலை கூட்டணியின் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது அந்த சலுகையை ஏற்கவில்லை என்றும் ஆனால் கி.துரைராசசிங்கம் மட்டுமே ஏற்றதாகவும் கிழக்கு அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.