இலங்கையில் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தைக் களமிறக்கி – மக்களை அச்சுறுத்தி – வருத்தி – துன்புறுத்தி நேர்மையில்லாத – முறை தவறிய கொடுங்கோன்மை ஆட்சியை தம்பியும் அண்ணனுமான ராஜபக்சக்கள் நடத்துகின்றனர்.
இதற்கு எதிராக நாட்டு மக்களை அணிதிரட்டப்போகின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கும்போது இந்த ஆட்சி கொடுங்கோன்மை ஆட்சி – மக்களை அடிமைப்படுத்தித் துன்புறுத்தும் ஆட்சி என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
இதை அறிந்தும் – நேரில் பார்த்தும் நாம் அமைதியாக இருக்கவே முடியாது.நாட்டின் தற்போதைய எதிர்க்கட்சிகளின் பிரதான பங்கு எமக்கே உரியது. இந்தநிலையில், இந்த ஆட்சியை எம்மால் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது.
எனவே, பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். மக்கள் அனைவரையும் அணிதிரட்டி இந்த அரசைத் தோற்கடிக்கும் வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பிக்க வேண்டும். அதற்குரிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
கைகளில் இரத்தக்கறை படிந்த குடும்பத்தினரை ஆட்சியில் நாம் தொடர்ந்து அமர்த்தினால் அது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும் என்பதை மக்கள் அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் .