பிரித்தானியாவுக்குள் வரும் அனைவரும் தங்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவேண்டும் என்னும் விதி இன்று அமுலுக்கு வந்தது.
விமானம், கப்பல் அல்லது ரயில் மூலம் வருவோர், அவர்கள் பிரித்தானிய குடிமக்களாக இருந்தாலும், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் இடத்தின் முகவரியை கொடுக்கவேண்டும்.
விதிகளை பின்பற்றாதவர்களுக்கு 1,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும். அயர்லாந்து, Channel தீவுகள் மற்றும் Isle of Man தீவிலிருந்து வருவோர் மட்டும் தங்களை தனிமைப்படுத்தவேண்டியதில்லை.
இதுபோக, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லொறிகளை இயக்குவோர் மற்றும் மருத்துவத்துறையில் பணியாற்றுவோருக்கும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் எல்லோரும் ‘பொது சுகாதார பயணிகள் இருக்குமிடத்தை தெரிவிக்கும்’ படிவம் ஒன்றை நிரப்பவேண்டும்.

படிவத்தை நிரப்பத் தவறுவோர், 100 பவுண்டுகள் அபராதம் செலுத்தவேண்டியிருக்கும். பயணிகளானால் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம்.
ஒருவர் தான் தங்கப்போகும் இடத்தின் முகவரியை கொடுக்க இயலவில்லை என்றால், அரசே அவர்கள் தங்குவதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்துதரும். ஆனால், அதற்கான செலவை பயணியே ஏற்கவேண்டும்.
விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
இங்கிலாந்துக்குள் வருவோர் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தத் தவறினால் 1,000 பவுண்டுகளும், ஸ்காட்லாந்துக்கு வருவோரென்றால் அவர்களுக்கு 480 பவுண்டுகளும் அபராதம் விதிக்கப்படும்.
தாங்கள் செல்லவேண்டிய இடத்துக்கு மக்கள் தங்கள் சொந்த வாகனத்தையே பயன்படுத்தவேண்டும்.
தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வோர், வரவேண்டிய இடத்தை அடைந்துவிட்டால், பின்னர் பொது போக்குவரத்தையோ, டாக்சிகளையோ பயபடுத்தக்கூடாது.
அவர்கள் வேலைக்கு செல்லக்கூடாது, பள்ளிக்கோ, பொது இடங்களுக்கோ செல்லக்கூடாது, அவர்களை யாரும் பார்க்க வரக்கூடாது -அத்தியாவசிய தேவை இருந்தாலொழிய.




















