பாடசாலை உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்கள் இந்த மாத இறுதி வாரத்தில் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலைகளுக்கு பதினாறாயிரம் உடல் வெப்பமானிகளை பெற்றுக்கொள்வதற்கு விலை மனுக் கோரப்பட்டுள்ளது.
அதன்படி முதல் வாரத்தில் 8000 வெப்பமானிகளும், இரண்டாவது வாரத்தில் 8000 வெப்பமானிகளும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் இந்த வெப்பமானிகள் குறித்த விலை மனுக் கோரல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் வெப்பமானிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் கல்வி அமைச்சு இன்று விசேட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
அத்துடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட முன்னதாக பொதுப் போக்குவரத்து வழமைக்கு திரும்ப வேண்டியது மிகவும் அவசியமானது என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறெனினும், பாடசாலைகளை வழமையாக இயக்குவது தொடர்பில் திடமான திகதிகள் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.