கொரோனா வைரஸ் தகவல் வெளியீட்டு விடயத்தில் கைது நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று குற்றம் சுமத்திய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிச்செய்ல் பெச்லெட்டுக்கு எழுதிய கடிதத்தில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் இந்தக்குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நலனில், குறிப்பாக கொரோனா தொற்றின்போது, தவறான தகவல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் அரசாங்கங்களும் எடுக்க வேண்டியது அவசியம் என்று இலங்கை பிரதிநிதி தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் பல சவால்களுக்கு மத்தியில், இலங்கை அரசாங்கம், பல மாதங்களாக, கொரோனாவில் இலிருந்து அதன் மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்; பணியில் ஈடுபட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பால் கூட இலங்கை அரசாங்கத்தின் முயற்சி பாராட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் பெரும்பாலும் அனைத்து தரப்பினரும் அரசாங்கத்துடன் ஒத்துழைத்த நிலையில் கொரோனா தொடர்பில் துல்லியமான தகவல்களை அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கியதாக ஜெனீவாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடயத்தில் ஒரு சமூகத்தை பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தயானி மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.