யாழில் தங்கியிருந்த தமிழக வர்த்தகர் கொரோனா தொற்றுக்கு இலக்கானது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பை பேணிய 5 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த புடவை வியாபாரியான கணேஸ் பாபு என்பவர், கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணம் வந்த நிலையில கொரோனா லொக் டவுனில் சிக்கினார்.
இலங்கையிலிருந்த இந்தியர்கள் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டபோது, கடந்த 31ஆம் திகதிகணேஸ் பாபுவும் யாழிலிருந்து பேருந்து மூலம் கொழும்பு சென்று, கப்பல் மூலம் இந்தியாவிற்கு சென்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று அவர் ஏழாலையிலுள்ள தனது நண்பரிடம் தகவலை தெரிவித்தார். ஏழாலையை சேர்ந்தவர் வடக்கு சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு அறிவித்தார்.
இதையடுத்து, இந்த தகவலை உறுதிசெய்ய இந்தி தூதரகத்திடம் கோரப்பட்டது.
இதற்கிடையில் வடக்கு சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள், தொலைபேசி மூலம் கணேஸ் பாபுவிடம் பேசினர். தான் தொற்றுக்கிலக்கானதையும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதையும் குறிப்பிட்டனர். வைத்தியசாலை தரப்பினருடனும் தொலைபேசியில் பேசி, தொற்றை உறுதி செய்தனர்.
இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் 5 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கணேஸ்பாபு தங்கியிருந்த இணுவில் தியேட்டர் வீதியிலுள்ள 3 வீடுகள், திண்ணைவேலியிலுள்ள வீடொன்று, ஏழாலையிலுள்ள வீடொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடுகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.